Published : 04 Mar 2024 01:30 PM
Last Updated : 04 Mar 2024 01:30 PM

நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் பிளவு: புதிய அரசு இன்று பதவியேற்கிறது

காத்மாண்டு: நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) மற்றும் நேபாளி காங்கிரஸ் கூட்டணி முறிந்ததை அடுத்து, இன்று புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து, புஷ்ப குமார் தமல் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட் மையம்) மற்றும் ஷே பகதூர் துபே தலைமையிலான நேபாளி காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இந்த கூட்டணி முடிவுக்கு வந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

“இன்று ஆட்சி மாற்றம் நிகழ்கிறது. புதிய அமைச்சரவை பதவியேற்க இருக்கிறது. சிறிய எண்ணிக்கையில் அமைச்சர்கள் பதவியேற்பார்கள்” என்று முன்னாள் நிதி அமைச்சரும், நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி - ஒருங்கிணைந்த மாக்ஸ்சிஸ்ட் லெனினிஸ்ட்(சிபிஎன்-யுஎம்எல்)-ன் துணைத் தலைவருமான சுரேந்திர பாண்டே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் புஷ்ப குமார் தமல் தலைமையிலான புதிய அமைச்சரவையில் சிபிஎன்-யுஎம்எல், ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சி, ஜனதா சமாஜ்வாதி கட்சி ஆகியவை இணைய உள்ளன.

நேபாள நாடாளுமன்றதின் மேலவைத் தலைவர் பதவிக்கு, நேபாளத்தின் இரு பெரும் கட்சிகளான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட் மையம்) மற்றும் நேபாளி காங்கிரஸ் ஆகியவை இடையே போட்டி ஏற்பட்டிருப்பதே ஆட்சி மாற்றத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கூடிய, மாவோயிஸ்ட் மையத்தின் மத்தியக் குழுக் கூட்டத்தில், மேலவைத் தலைவர் பதவிக்கு கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கு நேபாள காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்போது, தங்கள் கட்சி நேபாள காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்று புஷ்ப குமார் தமல் ஏற்கனவே வாக்குறுதி அளித்ததாகவும், தற்போது அந்த வாக்குறுதி மீறப்படுவதாகவும் நேபாள காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள மாவோயிஸ்ட் மையத்தின் செய்தித் தொடர்பாளர் அக்னி பிரசாத் சப்கோடா, “நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிக்கு கட்சி போட்டியிட வேண்டும் என மத்தியக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே வேட்பாளர் நிறுத்தப்பட இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பரத்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் புஷ்ப குமார் தமல், “பெரும்பாலான மத்தியக் குழு உறுப்பினர்களின் முடிவின்படி நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவிக்கு கட்சி போட்டியிடுகிறது. எழுத்துப்பூர்வ உத்தரவாதம் எதையும் நாங்கள் நேபாள காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கவில்லை. எங்கள் கட்சி சார்பில் நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவிக்கு கிருஷ்ணா சிதுவாலா போட்டியிடுவார்" எனத் தெரிவித்துள்ளார்.

59 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள மேலவையில் மாவோயிஸ்ட் மையம் 17, நேபாளி காங்கிரஸ் 16, சிபிஎன்-யுஎம்எல் - 19, சிபிஎன்(யுஎஸ்) - 8, ஜனதா சமாஜ்வாதி கட்சி - 3, ராஷ்ட்ரிய ஜனமோர்ச்சா சமாஜ்வாதி கட்சி - 1 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஒரு உறுப்பினரை நேபாள அதிபர் ராம் சந்திர பாதெல் நியமிப்பார். நேபாள நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 7ம் தேதி நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x