Published : 27 Feb 2024 05:06 PM
Last Updated : 27 Feb 2024 05:06 PM
ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரும், இஸ்ரேலும் சளைக்காமல் போர் புரிந்து வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்துவருகின்றனர்.
காசாவில் நடைபெற்றுவரும் ஹமாஸ் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்துவரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் சுமுக முடிவு எட்டப்பட்டால் பரஸ்பர கைதிகள் விடுவிப்பு, 6 வார காலம் தற்காலிக போர் நிறுத்தம் ஆகியவை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 10-ம் தேதி ரமலான் மாதம் தொடங்கவுள்ளது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக கருதப்படும் இந்த பண்டிகை தினத்தை முன்னிட்டு இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்கள்கிழமை ஊடகம் ஒன்றில் பேசும்போது, “ரமலான் நெருங்குகிறது. பிணைக் கைதிகளை வெளியே கொண்டுவர எங்களுக்கு நேரம் தரும் பொருட்டு இஸ்ரேலியர்கள் இந்த மாதத்தில் எந்த போர் நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என தெரிவித்துள்ளனர். தற்காலிக இடைநிறுத்தத்தின் போது, மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் தொடரும். அடுத்த திங்கட்கிழமைக்குள் இரு தரப்புக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT