Published : 06 Feb 2018 03:28 PM
Last Updated : 06 Feb 2018 03:28 PM
இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மூத்த மகள் ராகத் என்பவரை தேடப்படும் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்து இராக் அரசு அறிவித்துள்ளது.
இராக் அரசின் இந்த நடவடிக்கைக்கு சதாம் ஹூசைனின் மகள் ராகத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள், அல்காய்தா, பாத் கட்சி ஆகிய அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும், அந்த தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி வரும், ஆதரவு அளித்து வரும் 60 பேரை தேடப்படும் குற்றவாளியாக நேற்றுமுன்தினம் இராக் அரசு அறிவித்தது. அவர்களின் பெயர் பட்டியலையும், புகைப்படத்தையும் வெளியிட்டது.
இதுவரை இராக் அரசு இந்த குற்றவாளிகள் பட்டியலை வெளிப்படையாக அறிவித்தது இல்லை. முதல் முறையாக இந்த பட்டியலை அறிவித்து இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. இதில் பெரும்பாலானோர் அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ள தீவிரவாதிகளாவார்கள்
இந்தபட்டியலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் 28 பேர், அல்காய்தா அமைப்பைச் சேர்ந்த 12 பேர், பாத் கட்சியைச் சேர்ந்த 20 பேர் உள்ளனர். இவர்களின் புகைப்படம், பெயர், அவர்களுக்கும் அந்த அமைப்புக்கும் என்ன தொடர்பு, அதில் என்ன மாதிரியான பொறுப்புகளை வகிக்கிறார்கள் என்பது குறித்து அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மூத்த மகள் ராகத் பெயரும் இடம் பெற்றுள்ளது. தற்போது ராகத் ஜோர்டான் நாட்டில் வசித்து வருகிறார்.
ராகத்திடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், “ என்னுடைய பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இராக் அரசு இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. இது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன். எனக்கும் எந்த அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை” எனத் தெரிவித்தார்.
இதில் ஐஎஸ். தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் பெயர் இந்த பட்டியலி்ல் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT