Last Updated : 04 Feb, 2018 09:35 AM

 

Published : 04 Feb 2018 09:35 AM
Last Updated : 04 Feb 2018 09:35 AM

பிடலிட்டோ - கியூபாவின் அறிவியல் தந்தை

பி

டல் காஸ்ட்ரோ.. உலக வல்லரசான அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய கியூபா அதிபர். அவரைக் கொல்ல எத்தனையோ சதிகளைச் செய்தும் கடைசி வரை முடியாமல் போனது. அப்படிப்பட்ட போராளியான பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியாஸ் பலார்ட், தனது 68-வது வயதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

பிடலிட்டோ என கியூபா மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் அணு விஞ்ஞானி. கியூபாவின் அணு விஞ்ஞான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். நானோ தொழில்நுட்பம் வளர்ந்தபோது, தனியாக ஓர் ஆய்வு மையத்தை உருவாக்கி பல விஞ்ஞானிகளை உருவாக்கியவர். தந்தை இறந்த பிறகும் சித்தப்பா ரவூல் காஸ்ட்ரோ அரசில் அறிவியல் ஆலோசகராக இருந்து வந்தார்.

பிடல் காஸ்ட்ரோ என்ற ஆளுமையின் கீழ் இருந்தாலும் திறமையான அணு விஞ்ஞானி என தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். அப்பா அரசியலில் தீவிரமாக இருந்தபோது, இவர் அறிவியலில் தனக்கென முத்திரை பதித்தவர். இவரின் தற்கொலை கியூபாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1949-ல் பிறந்தவர் பிடலிட்டோ. ஸ்பெயினில் இருந்து அகதியாக வந்து கியூபாவின் மிகப் பெரும் பணக்காரராக உருவான டியாஸ் பலார்ட்டின் பெயரையும் சேர்த்து பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியாஸ் பலார்ட் என பெயர் சூட்டினார் தந்தை பிடல். ஆரம்பத்தில் இருந்தே அரசியல் ஆர்வம் இவருக்கு இருந்ததில்லை. அரசியலை விடவும் அறிவியலையே தான் விரும்புவதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மாஸ்கோவின் குர்ச்சடோவ் இன்ஸ்டிடியூட்டில் இயற்பியல் துறையில் பிஎச்.டி பட்டம் பெற்றார்.

அமெரிக்க எதிர்ப்பு காரணமாக பிடல் காஸ்ட்ரோவுக்கு உலகம் முழுவதுமே எதிரிகள் இருந்தனர். குடும்பத்தினருக்கு ஆபத்து வராமல் இருக்க கியூபாவில் இருக்கும்போதே தனது மகனை வேறு பெயரில்தான் படிக்க வைத்தார். மாஸ்கோவிலும் இதே பெயர்தான் தொடர்ந்தது. ஜோஸ் ரவுல் பெர்னாண்டஸ் என்ற பெயரில்தான் பிடிலிட்டோ தனது பட்டப்படிப்பையும் ஆராய்ச்சிப் படிப்பையும் முடித்தார். அந்த பெயரிலேயே 30-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 1980-ம் ஆண்டில் கியூபா அணு சக்தித் துறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என விரும்பினார் பிடல் காஸ்ட்ரோ. கியூபா அணு ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி அந்த ஆசையை நிறைவேற்றினார் பிடிலிட்டோ. ரஷ்யாவின் உதவியோடு, 1983-ல் அணு மின் உற்பத்திக்காக 2 அணு உலைகளை அமைக்கும் பணியை மேற்கொண்டார். 1992-ல் சோவியத் யூனியன் உடைந்து சிதறியதால், இந்தத் திட்டம் முடிவடையாமலேயே போனது. இருந்தாலும் உலக அளவில் நடைபெறும் அறிவியல் மாநாடுகளில் கியூபா சார்பில் பங்கேற்று வந்தார்.

கடந்த 2016-ல் தந்தை பிடல் காஸ்ட்ரோ இறந்தார். அதில் இருந்தே மன அழுத்தத்தில் இருந்து வந்தார் பிடிலிட்டோ. பல நேரங்களில் அவரையும் தந்தை பிடல் காஸ்ட்ரோவையும் ஒப்பிட்டு பலர் பேசுவதையும் கட்டுரைகள் வருவதையும் கவலையோடு பார்த்து வந்தார். இந்த ஒப்பீடு அவருக்குப் பிடிக்கவில்லை. இந்தக் கவலை மன அழுத்தமாக மாறியது. இந்த நிலையில்தான் பிப்ரவரி 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்தபிறகும், கியூபா நாளிதழ்களில் பிடல் காஸ்ட்ரோவோடு ஒப்பிட்டு பல கட்டுரைகள் வெளியாயின.

கியூபாவில் தற்கொலை என்பது புரட்சிக்கு எதிரான செயலாகவே பார்க்கப்பட்டது. தனது கடைசி மூச்சு வரை அமெரிக்காவை துணிச்சலோடு எதிர்த்து வந்த மாவீரன் பிடல் காஸ்ட்ரோவின் மகன், தற்கொலை செய்திருப்பது கியூபா மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x