Published : 15 Feb 2024 05:31 AM
Last Updated : 15 Feb 2024 05:31 AM

துபாயில் பிரதமர் உரைக்கு முன் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த ‘இந்திய குடியரசின் கவுரவ விருந்தினர்’

உலகின் மிக உயர்ந்த புர்ஜ் கலீஃபா கட்டிடம்.படம்: பிடிஐ

புதுடெல்லி: துபாயில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றுவதற்கு முன், அங்குள்ள உலகின் மிக உயர புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ‘இந்திய குடியரசின் கவுரவ விருந்தினர்’ என்ற வாசகங்கள் ஒளிர்ந்தன.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்றார். பயணத்தின் 2-ம் நாளான நேற்று அபுதாபியில் பிரம்மாண்ட சுவாமி நாராயன் கோயிலை அவர் திறந்து வைத்தார். முன்னதாக துபாயில் உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரைஆற்றுமாறு பிரதமர் மோடிக்கு துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத்அல் மக்தூம் அழைத்து விடுத்திருந்தார்.

இந்நிலையில் மாநாட்டில் பிரதமர் நேற்று உரையாற்றுவதற்கு முன், துபாயில் உள்ள உலகின் மிக உயர புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ‘இந்தியக் குடியரசின் கவுரவ விருந்தினர்’ என்ற வாசகங்கள் ஒளிர்ந்தன.

முன்னதாக பிரதமர் மோடிக்கு துபாய் பட்டத்து இளவரசர் சிறப்பான வரவேற்பு அளித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் “சிறந்த நிர்வாக நடைமுறைகள், வெற்றிக் கதைகள் மற்றும் முன்முயற்சிகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முன்னணி தளமாக உலக அரசு உச்சி மாநாடு மாறியுள்ளது, இந்தியக் குடியரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை இந்த மாநாட்டுக்கு அன்புடன் அழைக்கிறேன். நமது நாடுகளுக்கு இடையிலான வலுவான உறவுகள், சர்வதேச ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் யுஏஇ அதிபர் முகம்மது பின் சையது அல் நஹ்யானை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி, டெல்லி ஐஐடியின் அபுதாபி வளாகத்தை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத் தில் உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x