Published : 14 Feb 2024 05:22 AM
Last Updated : 14 Feb 2024 05:22 AM

அதிபர் முகமது அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: இந்தியா, யுஏஇ இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் முகமது அல் நஹ்யானை நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்றார். அப்போது அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்ட 27 ஏக்கர் நிலத்தை அந்த நாட்டுஅரசு வழங்கியது. இதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில்கோயில் கட்டுமான பணி தொடங்கியது. ரூ.700 கோடியில் கோயில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் இன்று திறக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று அபுதாபி சென்றார். அந்த நாட்டு அதிபர் முகமது பின் சையது அல் நஹ்யானை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யுஏஇ-யில் யுபிஐ மற்றும் ரூபே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் பிறகுஇந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

இரண்டாம் நாளான இன்று சுவாமி நாராயண் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதாரவழித்தடம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் யுஏஇ இடம் பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக யுஏஇ தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இன்று கத்தார் தலைநகர் தோஹாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அந்த நாட்டு தலைவர்ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியை அவர் சந்தித்துப் பேசுகிறார். இந்திய கடற்படையை சேர்ந்த 8 முன்னாள் அதிகாரிகளுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர்கள் 8 பேரும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சூழலில் பிரதமர் மோடியின் கத்தார் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார்பயணம் தொடர்பாக பிரதமர் மோடிநேற்று வெளியிட்ட அறிக்கை: அபுதாபியில் சுவாமி நாராயண் கோயிலை திறந்து வைக்க உள்ளேன். நல்லிணக்கம், அமைதி, சகிப்புத்தன்மைக்கு இந்த கோயில்உதாரணமாக திகழும். கத்தார் நாட்டின் தலைவர் தமீம் பின் ஹமாத் அல்-தானி தலைமையில் அந்த நாடு மிகப்பெரிய மாற்றத்தை கண்டு வருகிறது. இந்தியாவும் கத்தாரும் வரலாற்று ரீதியாகநெருக்கமான நாடுகள். இரு நாடுகள் இடையே வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் 8 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் இருநாடுகளுக்கும் இடையே உறவு பாலமாக விளங்குகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x