Published : 10 Feb 2024 11:26 AM
Last Updated : 10 Feb 2024 11:26 AM

அமெரிக்கா | வாஷிங்டன் நகரில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை: 2024-ல் 6வது சம்பவம்

அமெரிக்காவில் கொல்லப்பட்ட விவேக் சந்தர் தனேஜா | படம்: சமூக வலைதளம்.

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநகரத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு வெளியே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் பிப்.2-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு (அமெரிக்க உள்ளூர் நேரப்படி) நடந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடித்துக்கொல்லப்பட்டவர் வர்ஜினியாவில்லுள்ள நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாக வேலை பார்த்து வந்த, விவேக் சந்தர் தனேஜா(41) என்பது தெரியவந்துள்ளது. இவர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் தனேஜா காயங்களுடன் இருப்பதைக் கண்டு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர் பிப்.7-ம் தேதி மரணமடைந்தார். விவேக் சந்தர் தனேஜாவின் மரணத்தை போலீஸார் கொலை என்றே பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே வாஷிங்டன் மாநகர குற்றத் தடுப்புப் பிரிவு கொலைக் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இதுகுறித்து, கொலம்பியா மாவட்டத்தில் நடைபெறும் கொலைகளுக்கு காரணமான நபர் அல்லது நபர்களை கைது செய்து தண்டனை பெற்றுத்தரக்கூடிய வகையிலான தகவல்களைத் தரும் நபர்களுக்கு 25,000 டாலர் வரை வெகுமதி தரப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தகவல் தருவதற்கான எண்களையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இந்தாண்டில் இதுவரையில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 6வது நபர் விவேக் சந்தராவார். முன்னதாக, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்த 19 வயதான இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திய மாணவரான நீல் ஆச்சாரியா, பர்டூ பல்கலை., வளாகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஜன.16ம் தேதி ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி என்ற 25 வயது மாணவர் ஜார்ஜியாவின் லிதோனியாவில் வீடில்லாத ஒருவரால் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். அதே ஜனவரி.மாதம், இல்லினோய்ஸ் அர்பானா சாம்பெய்ன் பல்கலைக்கழகத்துக்கு வெளியே மற்றொரு இந்திய மாணவரான அகுல் தவான் இறந்து கிடந்தார். இந்தியாவை சேர்ந்த 23 வயதான முனைவர் பட்ட மாணவரான சமீர் காமத் மர்மமாக இறந்தார். இந்த நிலையில், வாஷிங்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் காமத் தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x