Published : 12 Feb 2018 11:51 AM
Last Updated : 12 Feb 2018 11:51 AM
உலகிலேயே மிகவும் உயரமான ஹோட்டல் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்ள துபாய் நகரில் இன்று திறக்கப்படுகிறது.
உலகின் உயரமான கட்டிடங்களுக்கு புகழ்பெற்றது துபாய் நகரமாகும். இங்குள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர்(2716 அடி)உயரமாகும். உலகிலேயே மிக உயரமான கட்டிடம் எனப் பெயர் பெற்றதாகும். அதன் பின் உயரமான ஹோட்டல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
துபாயில் இதுவரை உயரமான ஹோட்டலாக ஜே.டபிள்யு மாரியாட் மார்குயிஸ் ஹோட்டல் இருந்து வந்தது. அதைவிட உயரமாக இன்று துபாயில் மற்றொரு ஹோட்டல் திறக்கப்படுகிறது.
'ஜவோரா' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல் 75 மாடிகள் கொண்டது. தங்க நிற கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் 356 மீட்டர்(1,168 அடி) உயரம் கொண்டது. ஏறக்குறைய கால் மைல் தொலைவு உயரம் கொண்டதாகும்.
துபாயில் உயரமான ஹோட்டல் என ஏற்கனவே பெயர் பெற்றுள்ள ஜே.டபிள்யு மாரியாட் மார்குயிஸ் ஹோட்டலைக் காட்டிலும் ஒரு மீட்டர் உயரம் அதிகமாகும்.
துபாயில் 333மீட்டர்(1093அடி) உயரம் கொண்ட ரோஸ் ரேஹான் ஹோட்டலுக்கு அருகாமையில் ஜவோரா ஹோட்டல் அமைந்துள்ளது.
ஜவோரா ஹோட்டலுக்கு வரும் முதல் வாடிக்கையாளரை அந்த ஹோட்டல் நிர்வாகம் எதிர்பார்த்து இருக்கிறது.
இந்தஹோட்டலில் 528 அறைகள் உள்ளன.
இந்த ஹோட்டலில் 4 ரெஸ்டாரண்ட்கள், திறந்தவெளி நீச்சல்குளம், சொகுசு குளியல் அறை, மசாஜ் அறை, தண்ணீரை பீய்ச்சி மசாஜ் செய்யும் ஜக்குஜி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
துபாயில் ட்ரேட் சென்டர் பகுதியில், சேக் ஜயித் சாலையில் ஜவோரா ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலின் மிகச்சிறிய அறையின் அளவு 49 சதுர அடியாகவும், மிகப்பெரிய படுக்கை அறையின் அளவு 85 சதுர அடியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2013ம் ஆண்டு திறக்கப்பட்ட மாரியாட் மார்குயிஸ் ஹோட்டலில் 9 ரெஸ்டாரன்ட்கள், 5 பார்கள், 2 பால்ரூம்ஸ், ஹெல்த் கிளப், மாசாஜ் அறைகள் உள்ளன. இந்த இரு ஹோட்டலிலும் மொத்தம் 804 அறைகள் உள்ளன.
2020ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 2கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் நாடு சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT