Published : 07 Feb 2024 03:48 PM
Last Updated : 07 Feb 2024 03:48 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் என்ற நகரில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சுயேட்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகர் என்வரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், 14 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயமடைந்ததாகவும் பிஷின் நகர துணை காவல் ஆணையர் ஜூம்மா தாத் கான் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கான்சாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்துக்குள் இரண்டாவது குண்டுவெடிப்பு அதே பலுசிஸ்தான் மாகாணத்தின் கிலா ஃசைபுல்லா நகரில் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு JUI-F என்ற கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்துள்ளது. இதில், 12 பேர் உயிரிழந்ததாக கிலா ஃசைபுல்லா நகர துணை ஆணையர் யாசிர் பசாய் தெரிவித்துள்ளார்.
இவ்விரு குண்டுவெடிப்புகளுக்கும் இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தாலிபன், பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் ஆகியவை இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய அவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இன்று நாடு முழுவதும் அமைதியாக உள்ளது. இந்நிலையில், இந்த இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு காபந்து அரசின் உள்துறை அமைச்சர் கோஹர் இஜாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மக்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது எனும் நோக்கில் தீய சக்திகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளனர். இது கோழைத்தனமான தாக்குதல். தீய சக்திகளின் நோக்கம் நிறைவேற ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் மூத்த தலைவர் ராணா சனாவுல்லா, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT