Published : 05 Feb 2024 11:20 AM
Last Updated : 05 Feb 2024 11:20 AM
வல்பரைசோ: தென் அமெரிக்க நாடான சிலியில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சிலி நாட்டின் வல்பரைசோ (Valparaiso) பகுதியில் உள்ள வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான வீடுகள் பற்றி எரிந்து தீக்கிரையாகியுள்ளன. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மீட்புப் பணிகள் மும்முரமாக்கப்பட்டிருக்கிறது.
எனினும், இந்தக் கொடிய காட்டுத் தீயில் 1931-ல் நிறுவப்பட்ட பிரபல தாவரவியல் பூங்கா ஒன்று ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையானது. சிலியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயானது, மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளையும் பாதித்துள்ளது. சிலியின் கரையோர நகரங்களில் புகை சூழ்ந்ததால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, முக்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புகை மற்றும் தீப்பிழம்புகள் வினா டெல் மார் (Viña del Mar) என்ற நகரைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களை சூழ்ந்தன. சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் சிக்கிக்கொண்டனர். அதே நேரத்தில் வினா டெல் மார் (Viña del Mar) என்ற நகரைச் சுற்றியுள்ள பகுதியில் 200 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை, அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், “தீயினால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்கள் தேசிய துக்க நாட்களாக அனுசரிக்கப்படும். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும்” என்று அறிவித்தார். வல்பரைசோ பிராந்தியத்தின் ஆளுநர் ரோட்ரிகோ முண்டாகா, வினா டெல் மார், குயில்பூ, வில்லா அலெமனா மற்றும் லிமாச்சே ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இதனால் அதிகாரிகள் தீயை அணைப்பதில் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியிருப்பதாவது, “தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. 32 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். சிலியில் பிப்ரவரி 2023 ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் 4,00,000 ஹெக்டேர் நாசமாகியது. அதில் 22க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமயமாதல் காரணமாக, காட்டுத் தீ போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT