Published : 12 Feb 2018 12:19 PM
Last Updated : 12 Feb 2018 12:19 PM
லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரைப் பகுதியில் 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது.
மறுஅறிவிப்பு வரும் வரை பயணிகள் யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என லண்டன் விமானநிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் நேற்று மாலை மர்ம பொருள் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அந்த பொருள் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது, அந்த மர்ம பொருள் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பது தெரியவந்தது.
இதையடுத்து, எப்போதும் பரபரப்பாக இருக்கும் லண்டன் நகர விமானநிலையம் முன்அறிவிப்பின்றி மூடப்பட்டது.
விமானம் புறப்பட்டுச் செல்லவும், தரையிறங்கவும் தடைவிதிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியே அனுப்பப்பட்டு, மறு அறிவிப்பு வரும் வரை விமானநிலையத்துக்கு வரவேண்டாம், தகவல் தெரியவேண்டுமென்றால் விமானநிலையத்தின் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இது குறித்து லண்டன் விமானநிலையம் வெளியிட்ட அறிவிப்பில் “ தேம்ஸ் நதிக்கரைப் பகுதியில் கட்டிடப்பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் 2-ம் உலகப்போரில் பயன்படுத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றைக் கண்டுபிடித்தனர். இதனால் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 214 மீட்டர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லண்டனம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமானநிலையத்துக்கு மறுஅறிவிப்பு வரும்வரை வர வேண்டாம். தேவைப்படும் தகவலுக்கு விமானநிலையத்தின் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ” எனத் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, லண்டன் மாநகர போலீஸாரின் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு ஆகியோர் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு செயல் இழக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
லண்டனின் கிழக்குப்பகுதியில் நியூஹாம் போரோவ் பகுதியில் இந்த லண்டன் சிட்டி விமானநிலையம் அமைந்துள்ளது. விமானநிலையம் அமைந்துள்ள இந்த பகுதி 2-ம் உலகப்போரின் போது, தொழிற்சாலைகள், மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியாகும். இந்த விமானநிலையத்தின் முக்கிய ஓடுதளம் தேம்ஸ் நதிக்கரைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் ஹீத்ரு விமானநிலையத்தைக் காட்டிலும் மிகச்சிறிய விமானநிலையமாக இது கருதப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்களும் இங்கு வந்து செல்கின்றன. பிரிட்டிஷ் ஏர்வேஸ், லூப்தான்ஸா, பிளைபி, சிட்டிஜெட், கேஎல்எம் உள்ளிட்ட முக்கிய விமானங்கள் வந்து செல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT