Published : 04 Feb 2024 06:00 AM
Last Updated : 04 Feb 2024 06:00 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2018-ம் ஆண்டில் புஷ்ரா பீவி என்பவரை திருமணம் செய்தார். அவர்களின் திருமணத்தை எதிர்த்து புஷ்ரா பீவியின் முன்னாள் கணவர் கவார் பிரீத், ராவல்பிண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கவார் பிரீத்தும் புஷ்ரா பீவியும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். கடந்த 2017-ம் ஆண்டில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்தனர்.
முஸ்லிம் திருமண விதிகளின்படி கணவரை இழந்த பெண் அல்லது கணவரை விவாகரத்து செய்த பெண் உடனடியாக மறுமணம் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பமாக இருக்கிறாரா, இல்லையா என்பதை அறிய குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். இது ‘இத்கா காலம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த காலம் நிறைவடைவதற்கு முன்பே புஷ்ரா பீவியை, இம்ரான் கான் திருமணம் செய்ததாக குற்றம் சாட்டி முன்னாள் கணவர் கவார் பிரீத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ராவல்பிண்டி நீதிமன்றம், முஸ்லிம் திருமண விதிகளை மீறியதற்காக இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி குத்ரத் உல்லா தீர்ப்பளித்தார்.
இம்ரான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 2 வழக்குகளில் நீதிமன்றம் ஏற்கெனவே சிறை தண்டனை விதிக் கப்பட்ட நிலையில் இம்ரான் கான் சிறையில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT