Published : 03 Feb 2024 05:35 AM
Last Updated : 03 Feb 2024 05:35 AM
டொரண்டோ: 400 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருட்களுடன் இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டார்.
கனடா நாட்டின் மானிடோபா மாகாணத்தின் போய்செவைன் பகுதி வழியாக அண்மையில் ஒரு லாரி வந்தபோது அதை போலீஸார் மடக்கி சோதனை நடத்தினர். அதில் 406.2 கிலோ எடையுடைய மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிய டிரைவர் கோமல்பிரீத் சித்து கைது செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது குடும்பம் கனடாவில் வசித்து வருகிறது. இந்த போதைப்பொருளானது மிகப்பெரிய சூட்கேஸ்களில் அடுக்கி லாரிக்குள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு 5.1 கோடி கனடா டாலர் ஆகும்.
இதுகுறித்து கனடா எல்லைச் சேவை ஏஜென்சியின் மண்டல பொது இயக்குநர் ஜனாலி பெல்-பாய்சுக் கூறும்போது, “கடந்த ஜனவரி 14-ம் தேதி எல்லைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த போதைப்பொருட்களை கைப்பற்றினோம். கனடாவில் பிடிபட்ட மிகப்பெரிய அளவிலானபோதைப்பொருள் அளவு இதுவாகும். இந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளானது மூளையை தூண்டி உற்சாகமான மனநிலையை கொடுக்கும். அதேவேளையில் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருளாகும். இது பசியின்மையை ஏற்படுத்தும் திறன் கொண்டது. வெள்ளை நிறத்தில் மணமற்றதாக இருக்கும் மெத்தம்பெட்டமைன் தண்ணீர், ஆல்கஹாலில் எளிதில் கரையும்.
மேலும் இதை மாத்திரையாகவும், தூளாகவும் போதைக்குபயன்படுத்துவர். கைதான 29 வயது கோமல்பிரீத் சித்து, கனடாவின் வின்னிபெக் பகுதியைச் சேர்ந்தவர். இந்த லாரி, அமெரிக்காவில் இருந்து மானிடோபா மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT