Published : 17 Feb 2018 01:07 PM
Last Updated : 17 Feb 2018 01:07 PM
தென் ஆப்பிரிக்காவில் முக்கியப் பிரச்சினையானக இருக்கும் ஊழல், வேலையின்மையை ஒழித்து நாட்டுக்கு புதிய சூர்யோதயத்தை கொண்டுவருவேன் என்று புதிய அதிபராக பதவி ஏற்ற சிரில் ரம்போசா உறுதியளித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 9 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா மீது 70-க்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் பலவும் நிரூபிக்கப்பட்டன. அங்குள்ள இந்திய வம்சாவளியரான குப்தா குடும்பத்தாருடன் இணைந்து பல்வேறு முறைகேடுகளிலும், ஊழல்களிலும் ஜூமா ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அரசு நிர்வாகத்திலும், குப்தா குடும்பத்தாரின் தலையீடும் அதிகரித்தது, இது ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிருப்தியை அளித்தது.
ஜேக்கப் ஜூமாவுக்கு சொந்த கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு உருவாகி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த புதன்கிழமை ஜேக்கப் ஜூமா தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், அதிபராகவும், துணை அதிபர் சிரில் ரம்பாசா(வயது 65) தேர்வு செய்யப்பட்டார்.
சிரில் ரம்போசா நேற்று முறைப்படி அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக, சிரில் ரம்போசா நாடாளுமன்றத்தில் வந்ததும் அவருக்கு அனைத்து ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களும் எழுந்து கைதட்டி அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
சிரில் ரம்போசா அதிபராக பதவி ஏற்றபின், நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது-
நம்நாட்டின் வளர்ச்சியைச் சுற்றி ஏராளமான எதிர்மறை சூழ்நிலைகள் நிலவுகின்றன. வேலையின்மை, ஊழல், பொருளாதார சிக்கல், அரசின் கடன் அதிகரிப்பு, வர்த்தகப்பற்றாக்குறை என பல சிக்கல்கள் இருக்கின்றன.
இந்த பிரச்சினைகளை அனைத்தையும் தீர்க்க நான் முதலில் முன்னுரிமை அளித்து, புதிய சூரிய உதயத்துக்கு நாட்டை அழைத்துச் செல்வேன், அந்த காலம் வந்து கொண்டு இருக்கிறது.
நமது நாட்டின் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த சில கடினமான முடிவுகளையும் எடுக்கப்படும், நாட்டின் கடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அரசு நிறுவனங்களின் வளர்ச்சி சீரமைக்கப்படும்.
வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும் ஊழலும், வேலையின்மையும் முற்றிலும் ஒழிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யார் இந்த ரம்போசா?
65 வயதான ரம்போசா முன்னாள் தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். கடந்த 1990ம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி கடுமையாக இருந்த போது, தொழிற்சங்கத்தில் தலைவராக இருந்து, நிறவெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க கறுப்பினத் தொழிலாளர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்தியவர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்த ரம்போசா, அதை விட்டு அரசியலுக்குள் வந்தார்.
தென் ஆப்பிரிக்க அரசியல் நோக்கர்கள் கூறுகையில், “ வரும் 21-ம் தேதி தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பின் அரசில் ஜூமாவுக்கு ஆதராவாக இருந்து நிர்வாகத்தை சீரழித்து வரும் அவரின் ஆதரவாளர்கள் களையெடுக்கப்படுவார்கள். குறிப்பாக ஜூமாவுக்கு நெருக்கமாக இருக்கும் குப்தா குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை இருக்கும்” எனத் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT