Published : 19 Feb 2018 11:27 AM
Last Updated : 19 Feb 2018 11:27 AM
ஆண்கள் அனுமதி இல்லாமல் இனி சவுதி பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
சவுதி அரசின் பாதுகாப்பாளர் சட்டத்தின்படி, பெண் ஒருவர் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்றால், தந்தை, சகோதரர் கணவர் ஆகியோரில் ஒருவரது அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்தச் சட்டத்தை நீக்கக் கோரியும், திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் சவுதி பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன.
இந்த நிலையில் தனியார் துறையை விரிவுப்படுத்துவதை கருத்தில் கொண்டு பெண்கள் தொழில் தொடங்க இனி ஆண்கள் அனுமதி தேவையில்லை என்று சவுதி அரசு கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சகம் அதன் வலைதளத்தில்,
"பெண்கள் தங்கள் சொந்த வியாபாரத்தை அரசின் மின்-சேவைகளிலிருந்து பாதுகாவலரின் ஒப்புதல் இல்லாமல் தொடங்கலாம்" என்று தெரிவித்துள்ளது.
சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர். அந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த செப்டம்பரில் நீக்கப்பட்டது.
சவுதியின் 87-வது தேசிய தினத்தையொட்டி கடந்த ஆண்டு பெண்கள் முதல்முதலாக மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT