Published : 23 Jan 2024 04:00 PM
Last Updated : 23 Jan 2024 04:00 PM
சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் இரு வீடுகளில் 7 பேரைச் சுட்டுக் கொன்ற நபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஜோலியட் எனும் பகுதியில் இருக்கும் இரண்டு வீடுகளில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும், ரோமியோ நான்ஸ் என்பவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஜோலியட் போலீஸார் கூறும்போது, “கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள இரண்டு வீடுகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் இறந்தவர்களில் 5 பேரின் உடல்கள் 2212 வெஸ்ட் ஏக்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டிலும், மற்ற இருவரின் உடல்கள் 2225 வெஸ்ட் ஏக்கர் சாலையில் உள்ள வேறு ஒரு வீட்டிலும் இருந்தும் மீட்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பங்களுக்கும் 23 வயது ரோமியோ நான்ஸ் என்பவர்தான் காரணம் என்று இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் அடையாளம் கண்டனர். இந்த நபருக்கு வில் கவுண்டியில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு மரண வழக்கு மற்றும் ஜோலியட்டில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு வழக்கு ஆகியவற்றில் தொடர்பு இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
இந்த நிலையில், டெக்சாஸின் நாடாலியா பகுதியில் அங்குள்ள போலீஸார் ரோமியோ நான்ஸை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்குள் நடந்த மோதலினைத் தொடர்ந்து நான்ஸ் கைத்துப்பாக்கி ஒன்றால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரியவந்தது. அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பது குறித்து வில் கவுண்டி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்” எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச் சூடு வன்முறை குறித்த தகவல்களை சேகரித்து வரும் ஆவணக் காப்பகத்தின் தரவுகள், இந்த ஆண்டின் முதல் மூன்று வாரங்களுக்குள் இதுவரை 875 துப்பாக்கிச் சூடு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் நிலவி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் அதிக அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் அந்நாடு திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT