Published : 20 Jan 2024 03:44 AM
Last Updated : 20 Jan 2024 03:44 AM
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் விண்கலமான 'ஸ்லிம்' நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஐந்தாவது நாடு என்ற வரலாற்றை ஜப்பான் உருவாக்கியுள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலனை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான். நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் வகையில் அதன் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
அந்நாட்டின் தனேகஷிமா விண்வெளி மையத்தில் HII-A லாஞ்சர் (ராக்கெட்) மூலம் நிலவை ஆய்வு செய்வதற்கான SLIM எனும் ஸ்மார்ட் லேண்டர் மற்றும் XRISM எனும் செயற்கைக்கோள் மூலம் பேரண்டம் குறித்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் பேரண்டத்தின் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என ஜப்பான் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த பணியில் ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமைக்கு அமெரிக்காவின் நாசா உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இன்று வெற்றிகரமாக ஸ்லிம் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5-ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டா் பரப்புக்குள் துல்லியமாகத் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம் ‘நிலவின் ஸ்னைப்பா்’ என்று அழைக்கப்படுகிறது. வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டாலும், லேண்டர் விரைவாக சக்தியை இழந்தது. இதனால், இந்த மிஷன் குறைந்தபட்ச வெற்றியை பெற்றுள்ளது எனக் கூறியுள்ளது ஜப்பான்.
விண்கலத்தின் சூரிய மின்கலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாததால், பணி முன்கூட்டியே முடிவடையும் என்று அச்சம் உள்ளது என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது. எனினும், தற்போது லேண்டரிலிருந்து ஒரு சிக்னல் கிடைத்து வருவதாகவும், அது எதிர்பார்த்தபடி தொடர்புகொள்வதாகவும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT