Published : 19 Jan 2024 08:09 PM
Last Updated : 19 Jan 2024 08:09 PM

பயங்கரவாத இலக்குகள் மீது பாக்., ஈரான் பரஸ்பர தாக்குதல்: அமைதி காக்க ஐ.நா, அமெரிக்கா அழைப்பு

தெஹ்ரான்: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி பாகிஸ்தான், ஈரான் நாடுகள் பரஸ்பர வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் அமைதி காக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் அழைப்பு விடுத்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு பின்னர் ஆயுத பலமுள்ள இரண்டு அண்டை நாடுகள் அதன் எல்லைகளின் மீது நடத்தும் ராணுவத் தாக்குதல்கள் உலக அளவில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.

வியாழக்கிழமை ஈரானில் உள்ள தீவிரவாத இலக்குகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியிருப்பதாக ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்தது. முன்னதாக பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கொடுக்கப்பட்ட பதிலடியாக ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருந்தது.

அணு ஆயுத பலம் கொண்ட பாகிஸ்தானும், ஈரானும் இப்படி மோதிக்கொள்வது இது முதல் முறையில்லை என்றாலும் ட்ரோன், ஏவுகணைகள் வீசி தாக்கிக் கொண்டதால் இந்த தாக்குதல் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆன்டனியோ குத்தரெஸ், இருநாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், "பொதுச் செயலாளர் ஈரான், பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான ராணுவத் தாக்குதல்களால் இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறித்து ஆழந்த கவலை கொண்டுள்ளார்" என்றார்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "அமெரிக்கா நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. ஆயுத பலமுள்ள இரண்டு நாடுகள் மீண்டும் மோதிக் கொள்வதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பாகிஸ்தான் அதுகுறித்து அமெரிக்காவிடம் தெரிவித்தது எனக்குத் தெரியாது" என்றார். மேலும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க கிர்பி மறுத்துவிட்டார்.

அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் மேத்திவ் மில்லர் கூறுகையில், "இது எந்த வகையிலும், வடிவத்திலும் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. நேட்டோ இல்லாத நாடுகளில் பாகிஸ்தான் அமெரிக்காவின் முக்கியமான கூட்டாளியாகும். அது அப்படியேத் தொடரும் என்றாலும் இந்த விஷயத்தில் நாங்கள் அமைதியை வலியுறுத்துவோம்" என்றார்.

வியாழக்கிழமை நடந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “ஈரானின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 50 கி.மீ. தொலைவு வரை ஊடுருவிய எங்களது போர் விமானங்கள், பலுசிஸ்தான் தீவிரவாதிகளின் 7 முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்றன. ஈரான் வெளியுறவுத் துறை கூறும்போது, பாகிஸ்தான் தாக்குதலில் 4 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் தொற்றிய பதற்றம் மெல்ல மெல்ல ஈரானை ஆக்கிரமித்துள்ளது. மேற்கு ஆசிய பதற்றத்தால் தனது உள்நாட்டு, வெளியுறவு பாதுகாப்பு சவால்கள் மீதான அழுத்தம் தர அண்டை நாடுகளைத் தாக்க வேண்டிய நிர்பந்தத்துக்குள் ஈரான் விழுந்திருக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் கூட, பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்று அடையாளப்படுத்தி இருந்தது.

இந்நிலையில், ஈரான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து மார்தட்டிக் கொள்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் ஈரான் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த இஸ்ரேல் ஆதரவு தீவிரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறியது.

ஜன.18ம் தேதியுடன் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய ராணுவ நடவடிக்கை 694-வது நாளை எட்டியுள்ளது. அக்டோபர் 7, 2023-ல் ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து 3 மாதங்களைக் கடந்து பதிலடி கொடுக்கப்படுகிறது. காசாவில் 25,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 60,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியில் காசா சிக்கித் தவிக்கிறது.

இதனிடையே ஈராக், சிரியா, பாகிஸ்தான் என மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இதன் மூலம் சன்னி தீவிரவாத அமைப்புகளுக்கு ஓர் எச்சரிக்கையை அழுத்தமாக ஈரான் கடத்த விரும்புவதாக சர்வதேச விவகாரங்கள் தொடர்பான வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மேலும், தன்னைச் சுற்றியுள்ள பலவீனமான, அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மையற்ற நாடுகளில் இருந்து தனது இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் அமைப்புகளைத் துவம்சம் செய்ய தயங்காது என்ற செய்தியை ஈரான் வலுவாகக் கடத்தும் விதமாகவே மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது என்று வல்லுநர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x