Published : 19 Jan 2024 11:56 AM
Last Updated : 19 Jan 2024 11:56 AM

ராணுவத்தைத் திரும்பப்பெறுவது குறித்து இந்தியா - மாலத்தீவு இடையே பேச்சுவார்த்தை 

ஜெய்சங்கர், மூசா ஜமீர்

கம்பாலா: மாலத்தீவுடனான உறவு விரிசலுக்கு மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர்கள் இருவரும் இருநாட்டு உறவுகள் பற்றி வெளிப்படையான உரையாடல் நடத்தினர். இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.

அணிசேரா அமைப்பின் (Non-Aligned Movement) இரண்டு நாள் உச்சி மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கம்பாலா சென்றுள்ளார். இதனிடையே அவர் வியாழக்கிழமை அங்கு, மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் சந்திப்பு குறித்த புகைப்படத்தை வெளியிட்டு, "கம்பாலாவில் இன்று மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்துப் பேசினேன். இரு நாடு உறவுகள் பற்றி வெளிப்படையாக உரையாடினோம். மேலும் அணிசேரா அமைப்புத் தொடர்பான விவகாரம் குறித்தும் விவாதித்தோம்." என்று தெரிவித்துள்ளார்.

மலாத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தனது எக்ஸ் பக்கத்தில், "அணிசேரா அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவது, மாலத்தீவில் நடந்து கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது, சார்க் மற்றும் அணிசேரா அமைப்பின் ஒத்துழைப்பு குறித்து நாங்கள் உரையாடினோம். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி விரிவாக்குவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு மாலத்தீவில் நடந்த தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. நவம்பர் மாதம் அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், இந்தியாவிடம் வலுவான கோரிக்கை வைக்க மக்கள் எனக்கு ஆணை பிறப்பித்துள்ளனர். மாலத்தீவு மக்களின் ஜனநாயக விருப்பத்துக்கு இந்தியா மதிப்பளிக்கும் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே ஜன.8ம் தேதி முகமது முய்சு சீனாவுக்கு சென்றார். அப்போது மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கும் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பயணத்தினைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தை மாலத்தீவிலிருந்து வெளியேற அறிவுறுத்தும் அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு, அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை பிரதமர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அதை விமர்சிக்கும் வகையில் சர்ச்சையான கருத்தை சமூக வலைதள பதிவு மூலமாக தெரிவித்திருந்தனர் மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

இதற்கு இந்திய அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதே நேரத்தில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அங்கு ஆட்சியில் உள்ள முகமது முய்சு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட சூழலில் சர்ச்சை கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள கடல்சார் நாடுகளில் இந்தியாவின் முக்கியமான அண்டை நாடாக மாலத்தீவு உள்ளது. இங்குள்ள முந்தைய அரசால் இருநாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்து பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையில் அதிகம் பயனடையும் நாடு மாலத்தீவு என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x