Published : 18 Jan 2024 04:24 PM
Last Updated : 18 Jan 2024 04:24 PM

பாகிஸ்தான் தாக்குதலில் ஈரானில் உயிரிழப்பு 9 ஆக அதிகரிப்பு - ‘அமைதி’க்காக தலையிட முனையும் சீனா!

ஈரான் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக விளக்கம் தொடர்பான செய்தியை தொலைக்காட்சியில் காணும் நபர்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஈரானில் 9 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. முன்னதாக, ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கொடுக்கப்பட்ட பதிலடியில் ஈரானில் 9 உயிர்கள் பறிபோயுள்ளன. இரு நாடுகளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி தாக்கி வருகின்றனர். இது இன்று முளைத்த புதிய பிரச்சினை இல்லை என்றாலும் ஏவுகணை, ட்ரோன் வீசி தாக்கிக் கொள்வது என்பது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆண்டுக்கு ஒரு போர்! - போர் எப்போதும் ஒரு தேசத்தை மட்டுமோ, சம்பந்தப்பட்ட தரப்புகளை மட்டுமே பாதிப்பதாக அல்லாமல் சிற்றலை விளைவை ஏற்படுத்தும். ஆனால், மாறிவரும் உலக அரசியலில் போர் அதன் தாக்கத்தின் வீச்சை விஸ்தரித்துக் கொள்கிறது. அப்படித்தான் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் தொற்றிய பதற்றம் மெல்ல மெல்ல ஈரானை ஆக்கிரமித்துள்ளது. மேற்கு ஆசிய பதற்றத்தால் தனது உள்நாட்டு, வெளியுறவு பாதுகாப்பு சவால்கள் மீதான அழுத்தம் தர அண்டை நாடுகளைத் தாக்க வேண்டிய நிர்பந்தத்துக்குள் ஈரான் விழுந்திருக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் கூட, பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்று அடையாளப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், ஈரான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதலில் உயிரிழ்ந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து மார்தட்டிக் கொள்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் ஈரான் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த இஸ்ரேல் ஆதரவு தீவிரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறியது.

இன்றுடன் (ஜன.18, 2024) உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய ராணுவ நடவடிக்கை 694-வது நாளை எட்டியுள்ளது. அக்டோபர் 7, 2023-ல் ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து 3 மாதங்களைக் கடந்து பதிலடி கொடுக்கப்படுகிறது. காசாவில் 25,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 60,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியில் காசா சிக்கித் தவிக்கிறது.

ஈராக், சிரியா, பாகிஸ்தான்... அடுத்தடுத்த தாக்குதல் ஏன்? - 24 மணி நேரத்தில் ஈராக், சிரியா, பாகிஸ்தான் என மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இதன் மூலம் சன்னி தீவிரவாத அமைப்புகளுக்கு ஓர் எச்சரிக்கையை அழுத்தமாக ஈரான் கடத்த விரும்புவதாக சர்வதேச விவகாரங்கள் தொடர்பான வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும், தன்னைச் சுற்றியுள்ள பலவீனமான, அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மையற்ற நாடுகளில் இருந்து தனது இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் அமைப்புகளைத் துவம்சம் செய்ய தயங்காது என்ற செய்தியை ஈரான் வலுவாகக் கடத்தும் விதமாகவே மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஹவுத்தி பிரச்சினை வேறு! - இதற்கிடையில், ஹமாஸ்களுக்கு ஆதரவாக இஸ்ரேஸ் துறைமுகத்துக்கு செல்லும் அந்நாட்டுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, செங்கடல் பாதையில் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர் ஹவுதி படையினர். ஏமன் உள்நாட்டுப் போரில் அந்நாட்டின் பெரும் பகுதியை கைப்பற்றிய ஹவுதிகள் ஈரான் ஆதரவுடன் தாக்குதலில் ஈடுபடுவதாக இஸ்ரேலும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகிறது.

செங்கடல் பாதையில் செல்லும் சர்வதேச கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் அழைப்பு விடுத்தும் ஹவுதிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏமன் நாட்டின் ஹவுத்திகள் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆண்டுக்கு ஒரு போர் என்பதுபோல் ஆங்காங்கே போர்கள் முளைத்துக் கொண்டிருப்பது பிராந்திய அமைதிக்கு பெரும் பாதகமாக மாறி வருகின்றன.

பலத்தைப் பயன்படுத்துவோம்! - “பாகிஸ்தான் மீது இன்னொரு முறை ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் அது பெரும் பலத்துடன் எதிர்கொள்ளப்படும்” என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மூன்று சிறுமிகள் காயமடைந்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தீவிரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என பாகிஸ்தான் சொல்லி வருகிறது. அதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. இந்த மாதிரியான தாக்குதல்கள் அண்டை நாடுகளில் நம்பிக்கையை பாழாக்கும். தூதரக ரீதியாக பிரச்சினையை அணுக பல்வேறு வாய்ப்புகள் உள்ளபோது, ஈரான் தேர்ந்தெடுத்த வழி மிகவும் தவறானது” எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (ஜன.18) ஈரான் எல்லைக்குள் புரட்சிகர ஆயுதப் படைகள் முகாம்களை குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான். ஈரானின் சியஸ்டான் - பலுசிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் பதுங்கிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

சீனா தயார்: போர் மேகம் சூழும் வேளையில் ஈரான் - பாகிஸ்தான் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளது சீனா. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்க் கூறுகையில், பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஈரானும், பாகிஸ்தானும் அமைதி வழியில் கட்டுப்பாடுடன் நடக்கும் என்று சீனா நம்புகிறது. நிலைமையை சீராக்க நாங்க ஆக்கபூர்வமாக பங்காற்ற தயாராக இருக்கிறது. இரு தரப்பும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக இஸ்ரேல், ஹமாஸ், ஹவுதி, அமெரிக்க தலைமையிலான படைகள், ஈரான் ஆகியவை மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளால், பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடா பகுதிகள் அமைந்துள்ள மண்டலத்தில் பதற்றம் நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x