Published : 18 Jan 2024 08:13 AM
Last Updated : 18 Jan 2024 08:13 AM
இஸ்லாமபாத்: இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையேயான போரால் செங்கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலுக்கு வரும் கப்பல்கள் மற்றும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து போர் விமானங்கள், போர்கப்பல்கள் ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாத முகாம்களை குறிவைத்து குண்டு வீசின. இந்நிலையில் சிரியா மற்றும் இராக்கில் உள்ள குர்திஷ் பகுதியில் ஈரானுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-தும் முகாம்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர் 3 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-தும் தீவிரவாதிகள், ஈரானின் சிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையம் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தினர். இதில் 11 போலீஸார் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-அல்-தும் முகாம்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் மண்ணில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம், ஈரான் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ஈரான் நடத்திய தாக்குதல் சட்டவிரோத செயல் என்றும், பிரச்சினையை பேசி தீர்க்காமல் தாக்குதல் நடத்தியது கவலை அளிக்கக்கூடிய செயல் என்றும், இது இரு நாட்டு உறவை வெகுவாக பாதிக்கும் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் எந்த பதிலும் அளிக்கவில்லை. இரு நாடுகளும் சுமார் 959 கி.மீ தூரத்துக்கு எல் லையை பகிர்ந்துள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியை ஒட்டியுள்ள ஈரானின் சிஸ்தான் பகுதியில் ஈரானின் சிறுபான்மையினராக இருக்கும் சன்னி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஜெய்ஷ் அல்-தும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈரானுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அணு ஆயுதங்களை அதிகளவில் வைத்திருக்கும் பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ், ஹவுதி, அமெரிக்க தலைமையிலான படைகள், ஈரான் ஆகியவை மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளால், பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடா பகுதிகள் அமைந்துள்ள மண்டலத்தில் பதற்றம் நிலவுகிறது.
ஈரான் தூதர் வெளியேற்றம்: ஈரான் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் வெளியேறவும், ஈரானில் உள்ள பாகிஸ்தான் தூதர் திரும்பி வரவும் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜஹ்ரா பலூச் கூறுகையில், ‘‘ஈரானில் உள்ள பாகிஸ்தான் தூதரை, நாடு திரும்பும்படி அரசு கூறியுள்ளது. பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் தற்போது இங்கு இல்லை. அவர் ஈரானுக்கு சென்றுள்ளார். அவரை வெளியேற உத்தரவிட்டுள்ளதால், அவர் பாகிஸ்தான் திரும்பி வர மாட்டார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT