Published : 17 Jan 2024 10:58 AM
Last Updated : 17 Jan 2024 10:58 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் பாலோசிஸ்தான் பகுதியில் இருவர் உயிரிழந்த நிலையில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையானது வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் பாலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல் அதில் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை தாக்கியதாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்கியதாகத் தெரிவித்தது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் டேவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாட்டில் ஈரான் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தானின் காபந்து பிரதமர் அன்வர் உல் ஹக் கக்காரும் சந்தித்துக் கொண்ட வேளையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசானது ஈரான் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர், மூன்று சிறுமிகள் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளதோடு கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது எங்கள் வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல். இந்தத் தாக்குதல் அப்பாவிக் குழந்தைகள் இருவர் இறந்துள்ளனர். சிறுமிகள் காயமடைந்துள்ளனர். இது சிறிதும் ஏற்க முடியாதது. இதற்கு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று எச்சரித்துள்ளார். இருப்பினும் அந்த அறிக்கையில் தாக்குதல் நடைபெற்ற இடம் பற்றிய விவரமோ என்ன மாதிரியான தாக்குதல் என்பதைப் பற்றியோ விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தத் தாக்குதல் சட்டவிரோதமானது எனக் கண்டித்துள்ள பாகிஸ்தான், தெஹ்ரானில் உள்ளா ஈரான் வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரியின் வாயிலாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கான அந்நாட்டு பொறுப்பு அதிகாரிக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த தாக்குதலுக்கான விளைவை ஈரான் முழுமையாக அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மேற்கு ஆசியப் பிராந்தியத்தில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது பதற்றத்தை கூட்டியுள்ளது. அண்மையில் ஈராக், சிரியா மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் பாகிஸ்தானை இப்போது தாக்கியுள்ளது.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ஈரானில் நடந்த காசிம் சுலைமானி நினைவேந்தல் நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலடியாக ஈரான் அண்டை நாடுகளில் உள்ள தங்களுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளை, உளவு அமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறி தாக்கி வருகிறது. இதனால் போர் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT