Published : 17 Jan 2024 05:29 AM
Last Updated : 17 Jan 2024 05:29 AM
புதுடெல்லி: பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது பதற்றத்தை கூட்டியுள்ளது. அண்மையில் ஈராக், சிரியா மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானை இப்போது தாக்கியுள்ளது. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ஈரானில் நடந்த காசிம் சுலைமானி நினைவேந்தல் நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தின் மலைப்பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல். ஈரான் - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியில் சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் தீவிரவாத அமைப்பு கடந்த 2012-ல் நிறுவப்பட்டது. எல்லைப் பகுதியில் பணியாற்றும் ஈரான் போலீஸாரை கடந்த காலங்களில் இவர்கள் கடத்தியுள்ளதாக தகவல்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மூன்று சிறுமிகள் காயமடைந்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தீவிரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என பாகிஸ்தான் சொல்லி வருகிறது. அதை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. இந்த மாதிரியான தாக்குதல்கள் அண்டை நாடுகளில் நம்பிக்கையை பாழாக்கும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT