Published : 20 Aug 2014 10:00 AM
Last Updated : 20 Aug 2014 10:00 AM

கைது அபாயம் நீங்கும் வரை அசாஞ்சே வெளியே வர மாட்டார்

லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இப்போதைக்கு வெளியே வர மாட்டார்.

அவர் வெளியே வந்தால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்ற உத்தரவாதம் கிடைத்தால்தான் அவர் வெளியே வருவார் என்று அசாஞ்சேயின் வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இது தவிர, ஸ்வீடனில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள அசாஞ்சே, விரைவில் தூதரகத்தை விட்டு வெளியே வரப்போவதாக தகவல் வெளியானது.

இந்த தகவலை அவரின் வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “2 ஆண்டுகளாக தூதரகத்தில் தங்கியிருப்பதால் அசாஞ்சேவின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஈகுவடார் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார். அதற்கு மதிப்பு அளிக்கும்வகையில், அவர் வெளியே வந்தால் கைது செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதத்தை பிரிட்டன் அளிக்க வேண்டும்.

அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கூடாது. அப்போதுதான் அவர் வெளியே வருவார். இப்போது உள்ள சூழ்நிலையில் அதுபோன்ற உத்தரவாதம் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அவர் மருத்துவமனைக்கு சென்றால் கைது செய்யப்படக்கூடிய சூழல்தான் தற்போது உள்ளது. இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு 60-க்கும் மேற்பட்ட மனித உரிமை இயக்கங்கள் கொண்டு சென்றுள்ளன”

என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x