Published : 13 Jan 2024 06:58 PM
Last Updated : 13 Jan 2024 06:58 PM

தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி: சீனாவுக்கு பின்னடைவு ஏன்? - ஒரு பார்வை

தைவானின் புதிய அதிபராக லாய் சிங் டே தேர்வு

தைபே: 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று புதிய அதிபராக லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது சீனாவுக்கு பேரிடியாக மாறியுள்ளது. இந்தத் தேர்தலை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தைவானில் 4 ஆண்டுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகின. இதனால், சர்வதேச அரசியல் பார்வை, தைவான் மீது திரும்பியது. சுமார் 19.5 மில்லியன் தைவான் மக்கள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். தற்போது தைவானின் புதிய அதிபராக லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்கான முடிவு, போருக்கான பாதை அல்லது அமைதிக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கும் என்று சீனா நம்பியது. ஆனால், ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது சீனாவுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.

1996-ஆம் ஆண்டில் தைவான் அதன் முதல் அதிபர் தேர்தலை நடத்தியது. தைவான் தன்னை ஒரு தனி நாடாக நிலைநிறுத்திக் கொள்ள பாடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தைவானை தனது ஒரு பகுதியாக சீனா கருதுகிறது. தைவானுக்குத் தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கவும், அதைச் சுதந்திர நாடாக மாற்றவும் ஆளும் கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சி செயல்பட்டு வருகிறது. சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.

அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி மிரட்டல் விடுத்தது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால், சீனாவின் பொருளாதாரம் சற்று சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டு போர் ஏற்பட வாய்ப்பு குறைவு என பல வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.

தைவான் அதிபர் ரேஸில் மூன்று கட்சிகள் இருந்தன. அந்நாட்டின் ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி (Democratic Progressive Party- DPP) சார்பில் வில்லியம் லை சிங் டி (William Lai Ching-te) அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். அதாவது, அந்தக் கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் லாய் சிங் டே அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து சீனா ஆதரவு பெற்ற கோமிண்டாங் (KMT) அல்லது தேசிய வாத (Nationalist Party) கட்சியைச் சேர்ந்த ஹவ் யொ-ஹி (Hou Yu-ih) அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். அதேபோல், தைவான் மக்கள் கட்சியை (Taiwan People's Party -TPP) சேர்ந்த கோ வென் ஜி (Ko Wen-je) என்பவரும் வேட்பாளராக களமிறங்கினார். 2019-ஆம் ஆண்டு புதிதாக உதயமானதுதான் தைவான் மக்கள் கட்சி.

மும்முனையில் கடுமையான போட்டி நிலவிய நிலையில், ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றி அடைந்துள்ளது. தேசியவாத கட்சி வெற்றி பெற்றால், தைவான் மீதான சீன ஆதிக்கத்தை அதிகரிக்கக் கூடும் என்று அமெரிக்கா அஞ்சியது.

அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் லாய் சிங் டே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. லாய் சிங் டே அமெரிக்காவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க கூடியவராக அறியப்படுகிறார். இவரை பிரிவினைவாதி என்றும், அவர் வெற்றி பெற்றால் அவர் பிராந்தியத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்றும் சீனா விமர்சனம் செய்தது. அறுவை சிகிச்சை நிபுணரான இவர், தனது பணியை விட்டு விட்டு அரசியலுக்கு வந்தார். லாய் சிங் டே சீனாவின் அனைத்து முயற்சிகளை முறியடிப்பேன் என முழங்கியது குறிப்பிடத்தக்கது.

தைவானின் சுதந்திரத்துக்கான சதிகளை முறியடித்தே தீருவோம் என்று சீன ராணுவம் இன்று எச்சரித்திருந்தது. அதேசமயம் தைவானின் அதிபர் தேர்தலை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வந்தன. ஏனெனில், இந்தத் தேர்தலின் முடிவு அந்நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான எதிர்கால உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர்கள் எண்ணினார்கள். தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க குரல் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x