Published : 31 Aug 2014 10:43 AM
Last Updated : 31 Aug 2014 10:43 AM

நியூசிலாந்து நீதித் துறை அமைச்சர் ஜுடித் ராஜினாமா: சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளருடன் தொடர்பு என புகார்

சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளருடன் (பிளாகர்) தொடர்பு வைத்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், நியூசிலாந்து நீதித் துறை அமைச்சர் ஜுடித் கொலினஸ் சனிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் ஜுடித் பதவி விலகி இருப்பதால், பிரதமர் ஜான் கீ மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு மங்கி உள்ளது. இந்த நிகழ்வு தங்களுக்கு வெற்றியை தேடித் தரும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

ஜான் கீ அமைச்சரவையில் குறிப்பிடத் தகுந்த சில நபர்களில் ஒருவராக ஜுடித் திகழந்தார். இவருக்கு எதிர் காலத்தில் பிரதமராவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

புலனாய்வு பத்திரிகையாளர் நிக்கி ஹேகர் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ என்ற நூலில், ஜுடித்துக்கும் வலைப்பதிவாளர் கேமரூன் ஸ்லேட்டருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அம்பலப்படுத்தினார். ஜுடித்துடன் பரிமாறிக்கொண்ட ஸ்லேட்டரின் இ-மெயிலில் ஊடுருவி சேகரித்த தகவலின் அடிப்படையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜான் கீ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடுமையான மோசடிகளை கண்டுபிடித்து வழக்கு தொடுக்கும் அமைப்பான எஸ்எப்ஓ-வின் முன்னாள் இயக்குநரின் ஊழலை வெளிக் கொண்டு வருவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு ஸ்லேட்டருடன் ஜுடித் கலந்துரையாடி இருக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜுடித் கூறும்போது, “இ-மெயில் மூலம் எத்தகைய மோசடியி லும் ஈடுபடவில்லை. அதேநேரம் தேர்தல் நேரத்தில் கட்சிக்கு என்னால் பின்னடைவு ஏற்படக் கூடாது என்ற காரணத்துக்காக பதவியை ராஜினாமா செய்தேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x