Published : 11 Jan 2024 06:15 PM
Last Updated : 11 Jan 2024 06:15 PM

மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்க்கிறோம்: சீனா

சீன அதிபருடன் மாலத்தீவு அதிபர்

பெய்ஜிங்: மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கு இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததை அடுத்து, அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரம் நமது நாட்டில் தீவிரமடைந்தது. இந்நிலையில், சீன ஆதரவாளராகக் கருதப்படும் மாலத்தீவு அதிபர் முகம்மது மொய்சு கடந்த 8-ம் தேதி சீனா சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்த மாலத்தீவு அதிபர், அந்நாட்டு பிரதமர் லீ கியாங்கை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "இரு நாடுகளின் முக்கிய நலன்களை தொடர்ந்து உறுதியாக ஆதரிப்பது என இரு தரப்பும் ஒப்புக்கொள்கிறது.

தனது நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், தேசிய கவுரவம், மரியாதை ஆகியவற்றை மாலத்தீவு உறுதிப்படுத்திக் கொள்வதை சீனா உறுதியாக ஆதரிக்கிறது. மேலும், மாலத்தீவு தனது தேசத்தின் நிலைமைக்கு ஏற்ப தனக்கான வளர்ச்சிப் பாதையை ஆராய்வதை சீனா ஆதரிக்கிறது. அதோடு, மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிப்புற தலையீட்டை சீனா உறுதியாக எதிர்க்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டறிக்கையில் மாலத்தீவு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "ஒரே சீனா கொள்கையை மாலத்தீவு உறுதியாக ஆதரிக்கிறது. தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. சீனாவின் இறையாண்மையை குறைத்த மதிப்பிடும் எந்த ஒரு விஷயத்தையும் மாலத்தீவு எதிர்க்கிறது. சுதந்திர தைவான் என்பது பிரிவினைவாத நடவடிக்கை. தைவானுடன் அதிகாரபூர்வ உறவை மாலத்தீவு ஒருபோதும் கொள்ளாது. சீனாவின் உள் விவகாரங்களில் வெளிப்புற தலையீட்டை மாலத்தீவு எதிர்க்கிறது. தேசிய ஒருங்கிணைப்புக்காக சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மாலத்தீவு ஆதரிக்கிறது" என்று மாலத்தீவு தெரிவித்துள்ளது.

மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கு இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யா முதலிடத்திலும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பயணிகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x