Published : 11 Jan 2024 01:30 PM
Last Updated : 11 Jan 2024 01:30 PM
புதுடெல்லி: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நிகில் குப்தா என்ற இந்தியர் மூலம் இந்திய அதிகாரி முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதரங்களை வழங்க அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செக் குடியரசில் இருந்து நிகில் குப்தாவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கின் ஆதாரங்களை ஒப்படைக்கும் அவரது கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு இந்தக் கடிதத்தை சமர்ப்பிப்பதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நிகில் குப்தாவின் வழக்கறிஞர் ஜன.4-ம் தேதி நியூயார்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களை தாக்கல் செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்களை தரக் கோரி அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கைக்கு மூன்று நாட்களில் அரசு பதில் அளிக்கும் படி, யுஎஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விக்டர் மர்ரெரோ உத்தரவிட்டிருந்தார்.
காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார். இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து செக் குடியரசின் பிரேக் நகரில் தங்கியிருந்த நிகில் குப்தா 2023, ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு, அங்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT