Published : 11 Jan 2024 05:54 AM
Last Updated : 11 Jan 2024 05:54 AM
நியூயார்க்: லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்த குற்றத்துக்காக இவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், 2008-ம் ஆண்டில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் 161 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இவர் முக்கிய குற்றவாளியாக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவரை அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை சர்வதேச தீவிரவாதி என அறிவித்தன. அவரை நாடு கடத்துமாறு பாகிஸ்தான் அரசிடம் இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (யுஎன்எஸ்சி) திருத்தப்பட்ட பட்டியலின்படி, பிப்ரவரி 12, 2020 முதல் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் ஹபீஸ் சயீத் உள்ளார்.
ஏழு தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த குற்றங்களில் அவருக்கு 78 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றால் ஹபீஸ் சயீத் சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்டபோதிலும், சயீத் பாகிஸ்தானிலிருந்து, இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் நாடுகடத்தப்படவில்லை. 20 ஆண்டுகளாக அவர் பாகிஸ்தானிலேயே சுதந்திரமாக உலவி வந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...