Published : 10 Jan 2024 05:37 PM
Last Updated : 10 Jan 2024 05:37 PM
லண்டன்: உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் இருக்கிறது. இங்கே மணிக்கு 20 மைல் வேகத்திலேயே வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்குவதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகின்றது. மத்திய லண்டனில் 10 கிமீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாம்டாம் என்ற இருப்பிடம் (லொகேஷன்) கண்டறியும் தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 55 நாடுகளில் 387 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் லண்டன் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் லண்டனே முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனுக்கு அடுத்தபடியாக அயர்லாந்து நாட்டின் டப்ளின், கனடாவின் டொரன்டோ, இத்தாலியின் மிலன், பெருவின் லிமா ஆகிய நகரங்கள் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நகரங்களின் பட்டியலில் உள்ளன. பிரிட்டனிலேயே லண்டனுக்கு அடுத்தபடியாக மேன்செஸ்டர் நகரில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. அடுத்ததாக லிவர்பூல், ப்ரிஸ்டால், எடின்பர்க் நகரங்கள் உள்ளன.
இந்த ஆய்வு குறித்து டாம்டாம் நிறுவனம், “உலகிலேயே வாகனத்தை மெதுவாக இயக்கக் கூடிய இடம் லண்டன். அதுவும் குறிப்பாக நகரின் மையத்தில் மணிக்கு 50 மைல் தாண்டி இயக்க இயலாது. ஏனெனில் நகரில் வாகனத்தை வேகமாக இயக்கக் கூடிய கட்டமைப்பு இல்லை” என்றார்.
இந்நிலையில், இந்த ஆய்வு குறித்து லண்டன் மேயர் சாதிக் கானின் செய்தித்தொடர்பாளர் அளித்த ஊடகப் பேட்டியில், “இந்த ஆய்வறிக்கை தவறானது. இது லண்டன் நகரின் மையப் பகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு முதல் லண்டனில் சாலைப் பணிகள் ஆங்காங்கே மாறிமாறி நடைபெற்று வருகின்றன. இதனால் கூட வேகம் குறைவாக இருக்கலாம். போக்குவரத்துக்கு தோதான கட்டமைப்புகளுக்காக சாலைகள் செப்பனிடப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.
அதேபோல் லண்டன் போக்குவரத்து துறையின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் கார்ல் எடல்ஸ்டன் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இந்த அறிக்கையில் இருந்து முற்றிலுமாக முரண்படுகிறோம். இது லண்டனில் குறிப்பிட்ட 5 கிமீ தூரத்தில் உள்ள வாகனப் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதை எப்படி மொத்த நகருடனும் பொருத்திப் பார்க்க முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT