Published : 10 Jan 2024 03:55 PM
Last Updated : 10 Jan 2024 03:55 PM

“காசா போரில் குழந்தைகள், அப்பாவி மக்கள் கொடுத்த விலை அதிகம்” - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் @ இஸ்ரேல்

டெல் அவிவ்: காசா போரில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொடுத்த விலை அதிகமானது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் போர் 3 மாதங்களைக் கடந்து நடந்துவரும் நிலையில் பிளின்கன் இஸ்ரேல் வந்துள்ளார். இந்தப் போர் ஆரம்பித்த பின்னர் அவர் நான்காவது முறையாக இஸ்ரேல் வந்துள்ளார். இஸ்ரேல் அரசுப் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் அவர் போர் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் சென்று சேர்வதை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும். அதிலிருக்கும் தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும். அதேவேளையில் அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியிலேயே ஹமாஸ் குழுவினரும் கலந்துள்ளதால் இஸ்ரேலுக்கு அது சவாலாக இருக்கிறது. நான் இஸ்ரேலியத் தலைவர்களுடனான சந்திப்பில் மனிதாபிமான அடிப்படையில் சென்றுசேர வேண்டிய உதவிகள் பற்றி பேசினேன்.

கடந்த 3 நாட்களாக இஸ்ரேலின் அண்டை நாடுகளில் இருந்து வலிமையான நற்செய்திகள் வருகின்றன. இஸ்ரேலுடன் இயைந்து வாழ விருப்பக் குரல்கள் வருகின்றன. இந்தப் பிராந்திய முழுவதுக்குமான பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய முன்னெடுப்பு இது. அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் முடங்கிப் போன சமாதானப் பேச்சுகள் துளிர்விடவுள்ளன. இஸ்ரேலும் பாலஸ்தீன நாடு, பாலஸ்தீன அரசியல் உரிமைகள் ரீதியாக இறங்கிவர வேண்டும்” என்றார். ஆனால், இஸ்ரேலின் பாதுகாப்பைக் காரணம் காட்டி இத்தகைய சமரசங்கள் நடக்காது என்று பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

காசாவில் போர் உக்கிரத்தை இஸ்ரேல் குறைத்துவருகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பிளின்கன், “காசாவில் போர் உக்கிரமாக நடப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக இஸ்ரேல் எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. அமைதி ஒரே இரவில் திரும்பிவிடாது.

சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய தென் ஆப்பிரிக்கா இஸ்ரேல் போர்க் குற்றம் புரிந்ததாகக் கூறியுள்ளது. அது ஆதாரமற்றது. ஆனால் காசா போருக்கு குழந்தைகள், அப்பாவி மக்கள் கொடுத்த விலை பெரிது. காசாவில் 90 சதவீத மக்கள் தீவிர உணவுப் பாதுகாப்பின்மையால் வாடுகின்றனர். நீண்ட நாட்களுக்கு போதிய உணவு இல்லாமல் குழந்தைகள் தவிப்பது அவர்கள் வாழ்க்கையில் ஆறாத தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதிக உணவு, அதிகமான குடிநீர், தேவையான அளவில் மருந்துகள், இன்னும் நிறைய அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் காசாவை சென்று சேர வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x