Published : 09 Jan 2024 04:27 PM
Last Updated : 09 Jan 2024 04:27 PM

ஜப்பானில் 6.0 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 6.0 ஆகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. முன்னதாக கடந்த ஜனவரி 1, புத்தாண்டு தினத்தில் ஜப்பானில் 7.6 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கூடவே 120-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகின. இதில் 202 பேர் உயிரிழந்தனர். 565 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தில் பல்வேறு கட்டுமானங்கள் சேதமடைந்தனர். 23 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஹொகரிகு பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையானப் பனிப்பொழிவு நிலவுவதால் இதுநாள் வரை மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள இயலவில்லை. வீடுகளை இழந்த பலரும் நிவாரண முகாம்களிலேயே முடங்கியுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியனவற்றை சீரமைக்க முடியவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜன.1 நிலநடுக்கம் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளதாக அந்நாட்டு சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஜப்பானில் இன்று (ஜனவரி 9) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமும் மத்திய ஜப்பானிலேயே பதிவாகியுள்ளது. இதனால் கடந்த 1-ஆம் தேதி எந்தெந்த பகுதிகளிலும் பாதிப்பு உணரப்பட்டதோ அதே பகுதிகளிலேயே மீண்டும் பாதிப்பு உணரப்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

ஜப்பான் உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும், ஏனெனில், ஜப்பான் நாடு நான்கு ஒன்றிணைந்த டெக்டானிக் பெருந்தாங்கு பாறைகளின் மேல் அமர்ந்திருக்கிறது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து பெரிய அளவில் உராய்வுகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஜப்பான் நாட்டைத் தாக்குகின்றன. இருப்பினும், பெரும்பாலானவை உணர முடியாத அளவுக்கு மிதமானவைகளே.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. அப்போதே அடுத்த சில வாரங்களுக்கு நிலநடுக்க அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலநடுக்க சேத விவரங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x