Published : 06 Jan 2024 04:35 PM
Last Updated : 06 Jan 2024 04:35 PM

வங்கதேசத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காஜி ஹபிபுல் அவால் | வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர்

தாக்கா: வங்கதேசத்தில் நாளை 12-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வங்கதேசத்தின் 12-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நாளை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 350 நாடாளுமன்றத் தொகுதிகளில், 50 தொகுதிகளுக்கு அரசால் பெண்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதால் மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. 90 பெண்கள், 79 சிறுபான்மையினர் உள்பட 1,970 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 28 அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதோடு, 747 சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தல், ஆளும் அவாமி லீக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜாட்டியா கட்சிக்கும் இடையேயான போட்டியாகப் பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் சார்பில் 266 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 34 தொகுதிகளை இக்கட்சி கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கி உள்ளது. ஜாட்டியா கட்சி 265 வேட்பாளர்களை நிறுத்தியது. எனினும் இவர்களில் 26 பேர் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனர். பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. தற்போதுள்ள அரசின் தலைமையில் தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு வங்கதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ராணுவம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னரும் அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கில் வரும் 10ம் தேதி வரை ராணுவம் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர காவல்படை, பங்களாதேஷ் எல்லை காவல்படை, அதரடிப்படை ஆகியவையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனினும், கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் டாக்காவில் பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நேற்றிரவு மர்ம நபர்கள் தீ வைத்ததில் பயணிகளில் 4 பேர் உயிரிழந்தனர். தேர்தலை முன்னிட்டு சிறுபான்மையினர் குறிவைக்கப்படலாம் என்பதால், சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு இந்து மதம்-புத்த மதம் - கிறிஸ்தவ மதங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர் காஜி ஹபிபுல் அவால், நம்பகத்தன்மை நிறைந்த தேர்தலில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் கண்காணிக்கப்படுகிறது. தேர்தல் காலை 8 மணிக்குத் தொடங்கி 4 மணி வரை நடைபெறும். 4 மணிக்கு வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்கும் வரை தேர்தல் நடைபெறும். எனவே, அதிகபட்சம் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறலாம். வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x