Published : 05 Jan 2024 03:52 PM
Last Updated : 05 Jan 2024 03:52 PM
காத்மாண்டு: கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நேபாளத்துக்கு இந்தியா அந்நாட்டு மதிப்புப்படி ஆயிரம் கோடி ரூபாய் (75 மில்லியன் டாலர்) வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று நேபாள தலைநகர் காத்மாண்டு சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அங்கு இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைய நூலகத்தை இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "திரிபுவன் பல்கலைக்கழக மைய நூலகம், 25 பள்ளிகள், 32 சுகாதாரத் திட்டங்கள் ஆகியவற்றைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி நேபாளத்தின் ஜாஜர்கோட் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகளை அறிந்து இந்தியாவும் வருத்தமடைந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்ட 48 மணி நேரத்துக்குள் இந்திய அரசு, நேபாளத்துக்கு அவசர உதவிகளை வழங்கத் தொடங்கியது. அதோடு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் நேபாளத்துக்கு இந்தியா வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
அதன்படி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை புனரமைப்பதற்காக நேபாள ரூபாய் மதிப்பில் 1,000 கோடி, அதாவது 75 மில்லியன் டாலர் நிதி உதவியை வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. நேபாள பிரதமர் பிரசண்டாவை நேற்று சந்தித்தபோது நான் இதனை அவரிடம் தெரிவித்தேன். நேபாள மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவாக நிற்போம். நேபாள அரசின் முயற்சிகளுக்கு பங்களிப்போம்.
நேபாளத்துக்கு இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கி உள்ளது. இதில், 250 மில்லியன் டாலர் மாநியமாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 750 மில்லியன் டாலர் கடனாக அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா - நேபாளம் இடையேயான உறவு பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இது இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அண்டை நாடுகளுடன் குறிப்பாக நேபாளத்துடனான தனது உறவை தொடர்ந்து மேம்படுத்துவதில் உறுதிபூண்டுள்ளது. அனைவரோடும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி எனும் லட்சியத்தை முன்னோக்கி நகர்த்தவும், நேபாளம் உள்ளிட்ட நட்பு நாடுகளை உடன் அழைத்துச் செல்லவும் இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. வரும் நாட்களில் இந்திய - நோபள உறவு மேலும் வலுவடைந்து புதிய உச்சங்களைத் தொடுவோம்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT