Published : 04 Jan 2024 10:49 PM
Last Updated : 04 Jan 2024 10:49 PM
வாஷிங்டன்: டெட்ரிஸ் வீடியோ கேமில் வெற்றி பெற்ற முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் 13 வயது அமெரிக்க சிறுவனான வில்லிஸ் கிப்ஸன். நிண்டெண்டோ என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் வெளியிட்ட டெட்ரிஸ் கேமில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இதனை ஏஐ மட்டுமே வீழ்த்தி உள்ளது.
இதுகுறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் அவர் அப்லோட் செய்துள்ளார். இதற்காக சுமார் 157 லெவல்களை வெற்றிகரமாக அவர் கடந்துள்ளார். இதோடு ஹை ஸ்கோர், அதிக லெவல்கள் விளையாடியவர், அதிக லைன்களை கிளியர் செய்தவர், இறுதியாக கேமை வெற்றிகரமாக நிறைவு செய்தவர் என பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். 11 வயது முதல் டெட்ரிஸ் கேமை கிப்ஸன் விளையாடி வருகிறார். சுமார் 40+ நிமிடங்கள் விளையாடி இதில் அவர் வாகை சூடியுள்ளார்.
தொழில்முறையாக வீடியோ கேம் விளையாடும் பிளேயர்கள் கூட குறைந்த அளவிலான லெவல்கள் மட்டுமே இதில் விளையாடி உள்ளதாக தகவல். பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நுட்பங்களை பயன்படுத்தி இந்த கேம் விளையாடப்பட்டுள்ளது. அந்த வகையில் ரோலிங் கன்ட்ரோலர் என்ற டெக்னிக்கை பயன்படுத்தி கிப்ஸன் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறையில் நொடிக்கு 20 முறை வரை டி-பேட் மூலம் பிளாக் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். இதற்கு முன்னர் ஹைப்பர் டேப்பிங் என்ற டெக்னிக் பிரபலமாக இந்த வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அவரது வெற்றியை கிளாசிக் டெட்ரிஸ் உலக சாம்பியன்ஷிப் சிஇஓ வின்ஸ் கிளெமென்ட் உறுதி செய்துள்ளார். அதோடு இந்த கேமை வென்ற முதல் நபர் கிப்ஸன் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெட்ரிஸ் கேம்? உலக அளவில் அனைவருக்கும் இந்த வீடியோ கேம் குறித்த அறிமுகம் நிச்சயம் இருக்கும். அதிலும் கேமிங் கன்சோலை கொண்டு கடந்த 90-களில் விளையாடிய அனைவருக்கும் இந்த டெட்ரிஸ் கேமின் மாறுபட்ட வெர்ஷனை அல்லது அதிகாரப்பூர்வமற்ற குளோன் கேமை விளையாடி இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 1985-ல் இதன் முதல் வெர்ஷன் வெளியானது. கிப்ஸன் வென்றுள்ள நிண்டெண்டோ என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் வெர்ஷன் 1989-ல் வெளியானது. மேற்புறத்தில் இருந்து கீழ் நோக்கி வரும் வெவ்வேறு வடிவில் உள்ள டெட்ரோமினோக்களை பிளேயர்கள் வரிசைப்படுத்த வேண்டும். இதுதான் இந்த கேமின் டாஸ்க். லெவல் செல்ல ஆட்டத்தில் வேகம் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT