Published : 04 Jan 2024 06:04 AM
Last Updated : 04 Jan 2024 06:04 AM
கெர்மன்: ஈரானில் நேற்று நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 103-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 141 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை, 2020-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்தது. இராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது தொடர்ந்து கண்காணித்து துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுலைமானி உயிரிழந்தார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நேற்று அவரது நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்றுஆயிரக்கணக்கான மக்கள் அவரதுநினைவிடத்தை நோக்கி ஊர்வலம்சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் இரண்டுமுறை குண்டுகள் வெடித்ததாகவும் இதில்103-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 140-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஈரானின் தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே நடந்தஊர்வலத்தில் குண்டுகள் வெடித்துள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் இரிப் தெரிவித்துள்ளார். 15 நிமிடத்துக்குள் இரண்டு முறை வெடித்ததாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து மக்கள் சிதறி ஓடியுள்ளனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
“இது ஒரு பயங்கரவாத தாக்குதல்” என்று கெர்மனின் துணை ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு ஈரானின் சக்திவாய்ந்த முக்கிய நபராக சுலைமானி இருந்தார். ஈரானின் புரட்சிகர படையின் தளபதியாக இருந்த அவர், ஈரானியக் கொள்கைகளை பிராந்தியம் முழுவதும் செயல்படுத்துவதில் முக்கிய பங்குவகித்தார். ஹமாஸ், ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஆயுதக் குழுக்களுக்கு தளவாட உதவிகள் வழங்குவதற்கும் அவர் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில், அவரை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகின் முதன்மையான தீவிரவாதி என்று குறிப்பிட்டு அவரைக் கொல்ல உத்தரவிட்டார். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம், இராக்குக்குச் சென்றிருந்த சுலைமானியை அமெரிக்கா ராணுவம் ட்ரோன்மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது.
இந்தச் சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையெடுத்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான விரிசல் தீவிரம் அடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT