Published : 01 Jan 2024 05:26 PM
Last Updated : 01 Jan 2024 05:26 PM

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை: 90 நிமிடத்தில் 20+ நிலநடுக்கம், 1 மீ. எழுந்த பேரலைகள், இந்திய தூதரக ‘ஹெல்ப்லைன்’

டோக்கியா: ஜப்பான் நாட்டில் 90 நிமிடங்களில் அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டதால் அங்கு 1 மீட்டர் அளவுக்கு பேரலைகள் எழுந்தன. மத்திய ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, கரையோரப் பகுதிகளில் 33,500 வீடுகளில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதற்கிடையில், ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசர கால கட்டுப்பாட்டு அறையை அமைத்து ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. நிலநடுக்கம், சுனாமி தொடர்பாக அந்த எண்ணில் தொடர்பு கொண்டு இந்தியர்கள் தகவல்களைப் பெறலாம். வழிகாட்டுதல்களைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது. இந்திய நேரப்படி இன்று (ஜன.1) பிற்பகல் 12.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து 90 நிமிடங்களில் அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதிகபட்சமாக 7.5 ரிக்டர் வரை நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானது.

சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்: ஜப்பானில் சமீப காலங்களில் ஏற்படாத அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நோடோ தீபகற்பத்தின் இஷிகாவா பகுதி தான் நிலநடுக்கத்தின் மையமாக இருந்துள்ளது. இதனால் ஜப்பானின் மேற்குக் கரையை ஒட்டிய பகுதிகளில் அதிக தாக்கம் உணரப்பட்டது. ஹொகைடோ தீவுகள் முதல் நாகசாகி வரை தாக்கம் உணரப்பட்டது. அந்தப் பகுதி வரைக்குமே சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 1 முதல் 3 மிட்டர் உயரம் வரை, சில இடங்களில் 5 மீட்டர் உயரத்துக்குக் கூட அலைகள் எழலாம் என்று எச்சரிக்கப்பட்டது. இதனால் மக்கள் உயரமான கட்டிடங்களில் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஜப்பானில் நிலநடுக்கங்கள், சுனாமி ஆகியன ஏற்படுவது அம்மக்களுக்கு பழக்கப்பட்டதுதான் என்றாலும் கூட இன்று அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கம் அம்மக்களை நிலைகுலையச் செய்தது. ஆங்காங்கே சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள் திகைப்புக்கு உள்ளாகினர்.

சாலைகளில் பெரிய பெரிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. ஜப்பான் நாடு நிலநடுக்கம், சுனாமி இயற்கைப் பேரிடரை கருத்தில் கொண்டே கட்டுமானங்களை மரத்தால் வடிவமைப்பதால் கட்டிட இடிபாடுகள் பெருமளவில் ஏற்படாது.

மேலும், இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததால், அதன் தாக்கம் நிலத்தில் பெரியளவில் இல்லை. ஒருவேளை பூமிக்கு அடியில் மையம் கொண்டிருந்தால் நிச்சயமாக கட்டிட சேதம் போன்றவை அதிகமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

உதவி எண்கள் அறிவிப்பு: இதற்கிடையில் ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசர கால கட்டுப்பாட்டு அறையை அமைத்து ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. நிலநடுக்கம், சுனாமி தொடர்பாக அந்த எண்ணில் தொடர்பு கொண்டு இந்தியர்கள் தகவல்களைப் பெறலாம். வழிகாட்டுதல்களைப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. அவசர கால எண்கள் விவரம்:

+81-80-3930-1715 (யாகூப் டோப்னோ)
+81-70-1492-0049 (அஜய் சேத்தி)
+81-80-3214-4734 (டி.என்.பார்ன்வால்)
+81-80-6229-5382 (எஸ்.பட்டாச்சார்யா)
+81-80-3214-4722 (விவேக் ரதி) ஆகிய எண்களை அறிவித்துள்ளது. sscons.tokyo@mea.gov.in offfseco.tokyo@mea.gov.in இமெயில் முகவரியையும் அறிவித்துள்ளது.

அணுஉலைக்கு பாதிப்பில்லை: ஜப்பானின் புகுஷிமா அணு உலையின் 1, 2 அணுமின் நிலையங்களில் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று எக்ஸ் சமூகவலைதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புகுஷிமா அணு உலையின் 1 ஆம் எண் மின் நிலையம் கடந்த மார்ச் 2011-ல் கிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பின்னர் பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் வட கொரியா, தென் கொரியா, ரஷ்யாவின் கிழக்கு நகரங்களான விளாடிவோஸ்தக், நகோடா ஆகிய பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x