Published : 01 Jan 2024 03:37 PM
Last Updated : 01 Jan 2024 03:37 PM

“ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் பல மாதங்களுக்கு போர் நீடிக்கும்” - இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

டெல் அவிவ்: காசாவில் ஹமாஸுக்கு எதிராக நடக்கும் போர் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரான் உந்துதலால் ஹெஸ்புல்லாக்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஹமாஸுக்கு எதிரான போர் நடந்துவரும் சூழலில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நெதன்யாகு, "ஹமாஸுக்கு எதிரான போர் அனைத்து முனைகளில் இருந்தும் நடக்கிறது. இந்தப் போரில் வெற்றி காண இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஹமாஸை முற்றிலுமாக அழித்து, பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை தாக்குதல் தொடரும். இனியும் இஸ்ரேலுக்கு காசா அச்சுறுத்தலாக இருக்காது. அங்கே இனி தீவிரவாத சக்திகள் இருக்காது. சர்வதேச அழுத்தங்களுக்காக எங்களின் இலக்குகளை எட்டும் முன்னர் தாக்குதலை நிறுத்த முடியாது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தாக்குதலை நடத்துவதோடு வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை ஹமாஸை சேர்ந்த 8,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸின் போரிடும் திறன் முடக்கப்பட்டு படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. வடக்கு எல்லையில் இருந்து ஹெஸ்புல்லா தாக்குதல் தொடர்கிறது. அந்தப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்து அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் அங்கு கொண்டு சேர்ப்பதே முதன்மைப் பணி. ஹெஸ்புல்லா படையினர் தாக்குதலைத் தொடர்வார்கள் என்றால், அவர்கள் இதுவரை கனவிலும் கூட நினைத்திராத பதிலடியை எதிர்கொள்ள நேரிடும். இது ஈரானுக்கும் பொருந்தும். வடக்கில் உள்ள எங்கள் மக்களின் அமைதியை மீட்டெடுக்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம்.

ஈரான் தீமையின் அச்சாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக பல தரப்பிலிருந்தும் தாக்குதல்களை தூண்டிவிடுகிறது. உலகுக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது. ஈரானைக் கட்டுப்படுத்த, அதன் கைகளில் அணு ஆயுதங்கள் கிடைக்காமல் தடுக்க எதுவரையிலும் செல்வோம்" என்றார்.

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த1,200 பேர் உயிரிழந்தனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்து தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

இதுவரை நடந்த இஸ்ரேல் ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 20,424 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காசா முனையில் தரைவழி தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவுடன் நடந்த மோதலில் இதுவரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 157 பேர்உயிரிழந்துள்ளனர்.அதேவேளையில், பாலஸ்தீனத்தின் மேற்குகரையிலும் வன்முறை வெடித்துள்ளது. காசா மேற்கு கரையில் இதுவரை 303 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x