Published : 16 Jan 2018 09:48 AM
Last Updated : 16 Jan 2018 09:48 AM
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான்…. இந்த நாடுகளுக்கு எல்லாம் ஒரு பொதுவான களம் இருக்கிறது. மிகத் தீவிரமாக இவர்கள் ‘சண்டை’ இட்டுப் புகழ் பெறும் களம் அது. ‘ஒலிம்பிக்’!
2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில், மேற்சொன்ன 4 நாடுகளுமே முதல் 6 இடங்களுக்குள் உள்ளன. மொத்தம் இருந்த 307 தங்கப் பதக்கங்களில் 103 – இவர்கள் வசம்.
இந்தப் பின்னணியில்தான், ஜப்பான் பிரதமர் அபே முன் எடுத்த ராஜ தந்திர முயற்சிகள் கனிவதற்கு, நல்ல தருணம் தானாக அமைந்தது. இவ்வாண்டு பிப்ரவரி 9 முதல் 15 வரை, தென் கொரியாவில், பியோங் சாங் நகரில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்தப் போட்டிகள், பகையால் முட்டி மோதிக் கொள்ளும் கொரிய நாடுகளிடையே சமாதானத்தை ஏற்படுத்துகிற ஒரு வாய்ப்பாக ஏன் இருக்கக் கூடாது…? அபேவின் கணக்கு மிகச் சரியாக வேலை செய்தது. இரண்டு ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை ஏதும் இல்லாமல், தீவிர எதிரிகளாக இரண்டு நாட்டுத் தலைவர்களும் மாறி விட்ட நிலையில், எந்த அடிப்படையில் மீண்டும் சந்தித்துக் கொள்வது…?
தமக்குள் எவ்வளவு பகை, பொறாமை இருந்தாலும், ‘விளையாட்டு’ என்கிற பெயரில் உடன்பட்டுப் போனால், தம் நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு விடுவார்கள். சம்பந்தப்பட்ட தலைவர்கள் இதனை உணர்ந்து கொண்டார்கள்.
ஜப்பானின் முன் முயற்சி, சீனாவின் அழுத்தம், சந்திப்புக்கான நல்வாய்ப்பாக குளிர்கால ஒலிம்பிக்….. தென் கொரியாவுடன் பேசவும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ளவும் தயார் என்று அறிவித்தார் கிம் ஜாங் உன்.
வட கொரியா – தென் கொரியா இடையிலான பேச்சுவார்த்தையை, வடகொரிய அரசு பத்திரிகை, ‘ரோடோங் சின்மன்’ வெகுவாகப் பாராட்டி இருக்கிறது. ‘இரு நாடுகளுக்கு இடையே, தீர்க்கப்பட முடியாத பிரச்சினை என்று எதுவுமே இல்லை’ என்றும் கூறுகிறது.
இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுப் போட்டிகளைத் தாண்டி, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் வட கொரியா கடந்த 14-ம் தேதி அறிவித்தது.
பொறுப்பான தலைவர் ஒருவர் இருந்து முயன்றால், எந்த சிக்கலுக்கும் நல்ல வழி காண முடியும் என்பதை அபே, உணர்த்தி இருக்கிறார். ஆனாலும், தன்னால்தான் இந்தப் பேச்சுவார்த்தை சாத்தியம் ஆனதாகவும், ‘பின்னால் இருந்து’ தான் கொடுத்த அழுத்தம்தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் தன்னைத்தானே பாராட்டி கொள்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்கா – வட கொரியப் பிரச்சினை, நீறு பூத்த நெருப்பு போல், தொடர்ந்து கனன்று கொண்டேதான் இருக்கும். அது, வல்லரசுகள் ஆடும் அகந்தைப் போரின் ஒரு காட்சி.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஒரு பக்கம்; மறுபுறம்…? வறுமை, பசி, நோய்கள்… இவற்றினூடே, துரத்தி அடிக்கும் அரசுகள், மறுக்கப்படும் வாழ்வுரிமை…. சொந்த வீடும், நாடும் இல்லாத லட்சக்கணக்கான அகதிகள்…. மற்றும், எதிர்காலம் எழுப்பும் வினாக்களுக்கு விடை தெரியாமல் வேதனையில் உழலும் வெகுஜனம். சாம்ராஜ்யங்களின் சரித்திர சாதனைகள் தொடர்கின்றன. காலடியில் மிதிபட்டு சத்தமின்றி சாகின்றன சாமான்ய சருகுகள்.
இந்த ஆட்டத்தைத் தடுத்து நிறுத்துகிற வல்லமை – சர்வதேச ஊடகங்களுக்கு மட்டுமே உண்டு. நம்புவோம் – எழுந்து நிற்கும்; எதிர்த்துக் கேட்கும் - ஊடக உலகம். (முற்றும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT