Published : 17 Dec 2023 06:13 AM
Last Updated : 17 Dec 2023 06:13 AM
புதுடெல்லி: சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியும்படி அந்நாட்டு மக்களிடம் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டுகண்டறியப்பட்ட கரோனா வைரஸ்தொற்று பின்னர் உலகம் முழுவதும்பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்புநிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை: டிசம்பர் 3 முதல் 9 வரை கணக்கிடப்பட்ட கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 56,043 ஆகஅதிகரித்துள்ளது, இது முந்தையவார நோயாளிகள் எண்ணிக்கையுடன் (32,035) ஒப்பிடுகையில் 75 சதவீத உயர்வு ஆகும்.
கரோனா தொற்றுக்காக தினமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 225-ல் 350 ஆக அதிகரித்துள்ளது. இதில் தினமும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 4-ல் இருந்து 9 ஆக உயர்ந்துள்ளது. நோயாளிகளில் பெரும்பாலானோர் ஜேஎன்.1 வகை வைரஸின் துணைப் பிரிவான பிஏ.2.89 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகை வைரஸ் அதிகம் பரவக் கூடியவையா அல்லது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தக் கூடியவையா என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தற்போது இல்லை.
எனவே கடும் சுவாச நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே இருக்கவும், மற்றவர்களுடன் தொடர்பை தவிர்க்கவும், நோய்த் தொற்று அறிகுறி இல்லாதவர்கள் நெரிசலான இடங்களில் கட்டாயம் முகக் கசவம் அணியவும், விமானப் பயணிகள் முகக்கசவம் அணிவதுடன் பயண காப்பீடு எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீவிர நோய் பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை நாடலாம். இது, கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் சிகிக்சை பெற உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் ஜேஎன்.1 திரிபு: இந்நிலையில் கேரளாவில் ஒரு பெண்மணிக்கு கரோனா வைரஸின் ஜேஎன்.1 வகை திரிபு கடந்த 8-ம் தேதி கண்டறியப்பட்டதாக டெல்லியில் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “79 வயதான அந்தப் பெண்மணிக்கு கடந்த நவம்பர் 18-ம்தேதி ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிறகு இந்த வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்தப் பெண்மணிக்கு காய்ச்சல் போன்ற நோயின் லேசான அறிகுறிகள் இருந்தன. தற்போது அப்பெண்மணி நோயிலிருந்து குணமடைந்து விட்டார்” என்றார்.
இது தொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறும்போது, “இந்தியாவில் தற்போது 90 சதவீதத்திற்கும் அதிகமான கரோனா நோயாளிகள் லேசான பாதிப்பு கொண்டவர்கள். அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக இந்தியப் பயணி ஒருவருக்கு சிங்கப்பூரில் ஜேஎன்.1 வரை வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த அக்டோபர் 25-ம் தேதி சிங்கப்பூர் சென்றார்.
எனினும் திருச்சி மாவட்டத்திலோ அல்லது தமிழ்நாட்டின் பிற இடங்களிலோ இந்த வகை திரிபு பிறகு கண்டறியப்படவில்லை. மேலும் இந்த வகை திரிபு இந்தியாவில் வேறு எங்கும் கண்டறிப்படவில்லை. என்றாலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஜேஎன்.1 வகை வைரஸ் திரிபு முதன்முதலில் லக்ஸம்பர்க் நாட்டில் கண்டறிப்பட்டது. தொடர்ந்து பிற நாடுகளில் இந்த திரிபு கண்டறியப்பட்டு வருகிறது.
333 பேருக்கு கரோனா: மத்திய சுகாதார அமைச்சர் நேற்று காலையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 339 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனையில் சிகிக்சை பெறுவோர் எண்ணிக்கை 1,492 ஆகஅதிகரித்துள்ளது. நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 4.50 கோடியாக உள்ளது. இதில் சுமார் 4.44 கோடி பேர் (98.81%) குணம் அடைந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.19% ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT