Published : 13 Dec 2023 11:46 AM
Last Updated : 13 Dec 2023 11:46 AM
ஜெருசலேம்: காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 80 இஸ்ரேல் பிணைக் கைதிகளுக்கு இணையாக 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இஸ்ரேல் தெற்கு காசா பகுதிகளை குறிவைத்து பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 18,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான நிகழ்வில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும். இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோகரான ஜேக்கப் சல்லிவன், இஸ்ரேல் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளார். இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக "ஹமாஸை அழித்து பிணைக் கைதிகளை மீட்கும் இஸ்ரேலின் இலக்கை அமெரிக்கா ஆதரிக்கிறது. இருப்பினும், காசா போருக்குப் பிறகு என்ன நடக்க வேண்டும் என்பது குறித்து நட்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன" என்று நெதன்யாகு குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT