Published : 11 Dec 2023 05:20 PM
Last Updated : 11 Dec 2023 05:20 PM

தலாய் லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிம் வருகை

திபத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா

புதுடெல்லி: திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமா 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சிக்கிம் மாநிலத்துக்கு வருகை புரிந்துள்ளார். அவரை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார்.

திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா மூன்று நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை வருகை புரிந்துள்ளார். அவரை அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் (Prem Singh Tamang) வரவேற்றார். அதோடு, பல்வேறு புத்த மத துறவிகள், அவருக்குப் புத்த மத வழக்கப்படி ஷெர்பாங் பாடலைப் பாடி, நடனமாடிச் சிறப்பாக வரவேற்பு கொடுத்தனர். தலாய் லாமா, தற்போது காங்டாக்கில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைக் காண நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

87 வயதான தலாய் லாமா இந்தியா மற்றும் சீன எல்லையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பால்ஜோர் மைதானத்தில் நாளை போதனை செய்யவுள்ளார். தலாய் லாமாவிடம் ஆசி பெற இந்நிகழ்ச்சியில் சுமார் 40,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. தலாய் லாமா கடைசியாக 2010-ல் சிக்கிம் மாநிலத்துக்குச் சென்றிருந்தார். தற்போது அவர் காங்டாக் மாவட்டத்தில் உள்ள சிம்மிக் காம்டாங் தொகுதியில் கர்மபா பார்க் திட்டத்தின் அடிக்கல்லை நாட்டுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் இது குறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "தலாய் லாமாவுக்கு என்னுடைய அன்பான வரவேற்பு வழங்கி, மரியாதை செலுத்தியதைப் பாக்கியமாகக் கருதுகிறேன். அவருடைய ஆழ்ந்த போதனைகள் மற்றும் முன்மாதிரியான வழிகாட்டுதல்கள் நம் இதயத்தையும், மனதையும் வளப்படுத்துகிறது. ஆசீர்வதிக்கப்பட்ட சிக்கிம் பூமிக்கு, அவரை வரவேற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x