Last Updated : 23 Jan, 2018 05:23 PM

 

Published : 23 Jan 2018 05:23 PM
Last Updated : 23 Jan 2018 05:23 PM

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த பூகம்பம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு பீதியுடன் வெளியே ஓடிவந்தனர்.

அமெரிக்க புவியல் அமைப்பின் அறிக்கையின்படி, தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 100 கி.மீ தொலைவிலும், சுகாபூமி நகரில் இருந்து 104கிமீ தொலைவிலும், பூமிக்கு அடியில் 44 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் 6.0 ரிக்டர் அளவாகப் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த பூகம்பம் ஏற்பட்டவுடன், அலுவலகத்தில் வேலை செய்தவர்கள், வீடுகளில் இருந்த மக்கள், கடைகளில், வணிகவளாகங்களில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் சாலையில் வாகனத்தில் சென்றவர்களும் நடுவழியிலேயே வாகனத்தையும், இரு சக்கரவாகனங்களில் சென்றவர்கள் கீழே வாகனத்தை விட்டுவிட்டும் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.

இந்த நிலநடுக்கம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக மக்கள் தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இந்தோனேசியா பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஸ்டுபோ புர்வோ நுக்ரகோ கூறுகையில், “ சியாஞ்சூர் நகரில் ஒரு பள்ளியின் கட்டிடம் இடிந்ததில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். 130 வீடுகள், ஒரு மசூதி ஆகியவை சேதமடைந்தன. ஆனால், முழுமையான சேத விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

சிலி நாட்டு தூதரகத்தில் பணியாற்றும் ரூடி டோகாடோரப் கூறுகையில், “நாங்கள் அமர்ந்திருந்தபோது, திடீரென கட்டிங்கள், இருக்கைகள் குலுங்கத் தொடங்கின. அவசர வழிப்பாதை வழியாக கீழே இறங்கி உயிர்பிழைத்தோம். நிலநடுக்கம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை பூகம்பம் நீடித்தது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x