Published : 09 Jan 2018 12:29 PM
Last Updated : 09 Jan 2018 12:29 PM
தென் கொரியா - வடகொரியா இடையே இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் தணிக்கப்பட்டு இடைவெளி குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வடகொரியாவின் தொடர் ஆணுஆயுத சோதனை காரணமாக தென் கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் கடந்த இரு ஆண்டுகளாக மோதல் போக்கு வலுத்து வந்தது. வடகொரியாவின் அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டுவர தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் நாடும் பங்கேற்க விரும்புவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த புத்தாண்டு தினத்தில் அறிவித்தார். இது, தென் கொரியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் இது தொடர்பான பேச்சு வரத்தையில் தங்கள் நாட்டு அதிகாரிகளை அனுப்ப தயாராக உள்ளதாக வடகொரியா கூறியது. இதற்கு தென் கொரியா தரப்பிலும் வெள்ளைக் கொடி காட்டப்பட்டது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சியோலில் தென் கொரியா - வடகொரியா பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தென்கொரிய அமைச்சர் சோ மியோங்-கியோன், வடகொரியாவின் பிரதிநிதிகள் குழு தரப்பில் ரி சன் க்வான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பு குறித்து க்வான் கூறும்போது, "எங்கள் சகோதரர்கள் அளித்த நம்பிக்கையில் நாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம்" என்றார்.
தென்கொரிய அமைச்சர் சோ மியோங்-கியோன், கூறும்போது, "இந்த சந்திப்பு எங்கள் பேச்சு வார்த்தை பயணத்தின் முதல் அடியாக இருக்கும் என்று நம்புகிறேன். சில ஆண்டுகளாக தென் கொரியா - வடகொரியா இடையே பேச்சு வார்த்தை நடைபெறாததால் இந்த அனுபவம் புதுமையானதாக உள்ளது" என்றார்.
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு தென் கொரியா - வடகொரியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே நிலவிய போர் பதற்றம் குறையும் என்ற எதிர்பார்பு உலக நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT