Published : 31 Jan 2018 03:35 PM
Last Updated : 31 Jan 2018 03:35 PM
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் காவடி எடுத்தும், பால்குடங்களை எடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் கோம்பாக் மாவட்டத்தில் சுண்ணாம்புக் கற்களால் ஆன பத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சுண்ணாம்பு குன்றுகள் ஏறக்குறைய 40 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனக் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இந்த கோயிலின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 140 அடி உயரமான முருகன் சிலை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூசத்திருவிழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மலேசியா, சிங்கப்பூரில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்று அதிகாலையிலேயே காவடி எடுத்தும், பால்குடங்களை சுமந்து வந்தும் கோயிலுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் முகத்திலும், வாயிலும், உடலிலும் அலகு குத்தி வந்து வழிபட்டனர்.
மலேசியாவில் 3 கோடிக்கு அதிகமான முஸ்லிமகளும், சீனவர்களும் வாழ்கின்ற போதிலும, 20 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் அங்கு வசிக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியில் தொழிலாளர்களாகச் சென்ற தமிழர்கள் அங்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கோயிலில் தரிசனத்துக்கு வந்த வேலுச்சாமி விமலன் தம்பதி கூறுகையில், “ எங்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது, அதற்கு நன்றி செலுத்தும் வகையில், தைப்பூசம் நாளான இன்று அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து நன்றி செலுத்தினோம்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT