Published : 01 Dec 2023 07:12 PM
Last Updated : 01 Dec 2023 07:12 PM
லண்டன்: இங்கிலாந்தில் கடந்த மாதம் காணாமல் போன 23 வயது இந்திய மாணவர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மித்குமார் படேல் மேற்படிப்புக்காக கடந்த செப்டம்பர் 19ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார். ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அவருக்கு இடம் கிடைத்துள்ளது. மேலும், அமேசானில் பகுதி நேர வேலையும் கிடைத்துள்ளது. இதையடுத்து, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி மித்குமார் படேல் ஷெஃபீல்டுக்கு செல்ல இருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 17-ம் தேதி மித்குமார் படேல் காணாமல் போனதாக லண்டனில் உள்ள அவரது உறவினர் தெரிவித்துள்ளார். வழக்கமாக வீட்டுக்கு வரும் மித்குமார் படேல், வராததை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 21-ம் தேதி லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் மித்குமார் படேலின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலைக் கைப்பற்றிய போலீசார், மரணம் சந்தேகத்துக்கு உரியதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மித்குமார் படேலின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க அவரது உறவினரான பார்த் படேல், Go Fund Me என்ற இணையதளத்தின் மூலம் நிதி உதவி கோரியுள்ளார். அதில் மித்குமார் படேல் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "மித்குமார் படேல் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராமத்தில் வசித்து வந்தவர். கடந்த நவம்பர் 17, 2023 முதல் அவர் காணாமல் போன நிலையில், நவம்பர் 21-ம் தேதி அவரின் உடல் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டது. இது எங்கள் அனைவருக்கும் வருத்தமாக இருந்தது. அவரது குடும்பத்துக்கு உதவுவதற்காக நிதி திரட்ட நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மித்குமாரின் குடும்பத்திற்கு இந்த நிதி பாதுகாப்பாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT