Published : 01 Dec 2023 09:21 AM
Last Updated : 01 Dec 2023 09:21 AM
துபாய் நகரம்: சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு (வியாழன்) துபாய் சென்றடைந்தார். அவருக்கு துபாய் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சர்வதேசத் தலைவர்கள் பலரும் வருகை தந்துள்ள நிலையில் துபாயில் தொடங்கியுள்ள ஐ.நா.வின் COP28 மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனங்கள், சிந்தனை மையங்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், மாணவப் பிரதிநிதிகள் எனப் பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளி) நடைபெறும் சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாtட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி காலநிலை தொடர்பான இன்னும் 2 உயர் மட்ட கருத்தரங்குகளின் கலந்து கொள்கிறார்.
துபாய் பயணத்துக்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், ”COP28 உச்சி மாநாடானது பாரீஸ் ஒப்பந்தத்தின்படி உலக நாடுகள் காலநிலை மாற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த மாதிரியாக முன்னேறியுள்ளன, எதிர்கால திட்டங்கள் என்ன?, அவற்றை செயல்படுத்தும் வழிமுறையகள் யாவை ஆகியன குறித்து ஆலோசிக்க வாய்ப்பளிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
COP28 உச்சி மாநாடானது நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் இந்த மாநாட்டை ஏற்று நடத்துகிறது. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதில் கூட்டுமுயற்சியை வலியுறுத்தும் எனத் தெரிகிறது. அதேபோல் கரியமிலவாயு உமிழ்தலைக் கட்டுப்படுத்துவதில் உள்ள நிதிச் சிக்கல் பற்றியும் ஆலோசிக்கப்படவுள்ளது. வளர்ந்த நாடுகள் வறுமையில் உள்ள நாடுகளுக்கு காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல் பற்றியும் விவாதிக்கிறது.
கடந்த 27வது மாநாட்டிலும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், இது எப்படி வேலை செய்யும் என்பதில் இன்னமும் தெளிவின்மை நிலவுகிறது. அமெரிக்கா தன் வரலாற்று உமிழ்வுகளுக்கான இழப்பீட்டை செலுத்த மறுத்துள்ளது இந்தத் தெளிவற்ற நிலைக்கான ஓர் எடுத்துக்காட்டு. எனவே, நடப்பு மாநாட்டில் நிதியுதவி சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சிக்கப்படும் எனத் தெரிகிறது.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் - விவரம்: காலநிலை மாற்றம் தொடர்பாகப் பேசப்படும் போதெல்லாம் பாரீஸ் ஒப்பந்தம் பருவ நிலை ஒப்பந்தம் பற்றி குறிப்பிடப்படுவது வழக்கம். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் என்பது கடந்த 2015- ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டன. வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காக வரையறுக்கப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி கரியமில வாயுகளை அதிகமாக வெளியேற்றும் நாடுகள் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. காலப் போக்கில் இந்த ஒப்பந்தத்தில் பல வளர்ந்த நாடுகளும் வெளியேறின. இந்நிலையில் 28வது COP உச்சி மாநாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment