Published : 30 Nov 2023 08:40 AM
Last Updated : 30 Nov 2023 08:40 AM
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர், நிக்சன், ஜெரால்டு போர்டு ஆகிய இரண்டு அதிபர்களின் கீழ் பணியாற்றி தூதரக ஆலோசகர் என்ற பல பெருமைகளைக் கொண்ட ஹென்ரி கிஸ்ஸிங்கர் மறைந்தார். அவருக்கு வயது 100. கனக்டிக்கட்டில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. கிஸ்ஸிங்கர் புகழ் பெற்றவர் மட்டுமல்ல சர்ச்சைகளின் நாயகரும்கூட.
யார் இந்த ஹென்ரி கிஸ்ஸிங்கர்? அமெரிக்காவின் இரண்டு முன்னாள் அதிபர்களுக்குக் கீழ் பணியாற்றி வெளியுறவுக் கொள்கைகளில் பல கடுமையான முடிவுகளை எடுத்ததற்காக அறியப்பட்டவர் ஹென்ரி கிஸ்ஸிங்கர்.
போர்களை நியாயப்படுத்துவது மற்றும் அவற்றை நடத்துவது மட்டும் ரியல்பொலிடிக் நிலைபாட்டினை அவர் கொண்டிருந்ததாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு சுற்றி நிறைய விவாதங்கள் எழுந்தன.
ஆனால், கிஸ்ஸிங்கர் தான் ஒரு ரியல்பொலிடிக் ஆதரவாளர் என்பதை தொடர்ந்து மறுத்து வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஜெர்மனி பத்திரிகை ஒன்றிற்கு அவர் கொடுத்த பேட்டியில், "ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக நான் இதைச் சொல்கிறேன். ரியல்பொலிடிக் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அடிக்கடி என் மீது குற்றம்சாட்டப்படுகிறது. அந்த வார்த்தையை நான் பயன்படுத்தியதாக எனக்கு நினைவில் இல்லை. விமர்சகர்களை என்மீது அந்த முத்திரையைக் குத்தி வருகின்றனர்" எனக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இருப்பினும், கிஸ்ஸிங்கரை இடதுசாரிகள் ஒரு போர் குற்றவாளியாகவே பார்க்கின்றனர். வியட்நாம் போரை இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விஸ்தரித்தது, சிலியின் 1973 ராணுவக் கிளர்ச்சியை ஆதரித்தது, கிழக்கு தைமோரை இந்தோனேசியா ஆக்கிரமிக்க தூண்டியது, 1971 வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் சென்றது என கிஸ்ஸிங்கர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன.
வாழும்போது வெளியுறவுக் கொள்கைகளுக்காக அறியப்பட்ட கிஸ்ஸிங்கர் மறைவு அவருடைய கொள்கைகள் பற்றி மீண்டும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியபோதுகூட கிஸ்ஸிங்கரின் கொள்கைகள் சுட்டிக்காட்டப்பட்டு அமெரிக்காவின் நிலைப்பாடு விவாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT