Published : 24 Nov 2023 11:41 PM
Last Updated : 24 Nov 2023 11:41 PM
காசா: முதல் குழுவாக 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை13,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தனர்.
அந்த வகையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். அதோடு, 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அதாவது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தபடி தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கியதை அடுத்து ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பிணைக் கைதிகளை விடுவித்துள்ளது. 13 இஸ்ரேலியர்கள் மற்றும் 12 பிற நாட்டினர் என மொத்தம் 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் முதல் குழுவாக விடுதலை செய்துள்ளது.
13 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை தங்கள் நாட்டின் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை வட்டாரம் தெரிவித்துள்ளது. பிணைக் கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலமாக இஸ்ரேல் அனுப்பப்பட்டுள்ளனர். "விடுதலை செய்யப்பட்டவர்களில் 13 இஸ்ரேலிய குடிமக்கள் உள்ளனர். 10 தாய்லாந்து குடிமக்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகன்" என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவித்த அதேநேரம், இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT