Published : 23 Nov 2023 12:38 PM
Last Updated : 23 Nov 2023 12:38 PM
ஜெருசலேம்: "இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எந்த பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள்” என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை13,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தனர்.
அந்த வகையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று அறிவித்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அதோடு, 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அதாவது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது. இன்று காலை முதல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கலாம் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் இருக்கும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், "இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பிணைக்கைதிகளின் விடுதலை என்பது வெள்ளிக்கிழமைக்கு (24 ஆம் தேதி) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment